இலங்கை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோதி

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை வந்துள்ளார். வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்பட அமைச்சர்கள் வரவேற்றனர். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

பின்னர் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஹட்டன் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனையை திறந்துவைக்கும் நிகழ்வில் மோதி கலந்துக்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோதியின் இலங்கை விஜயத்தை எதிர்த்து கூட்டு எதிர்க் கட்சி உட்பட சில அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளனர். கூட்டு எதிர் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான விமல் வீரவன்ஸ கருத்து தெரிவித்த போது திருகோணமலையில் அமைந்துள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு மையத்தை அமைக்கும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களை அண்மையில் நிராகரித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மட்டுமே இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் எனத் தெரிவித்திருந்தார். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.