‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த வாக்கெடுப்பானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ​பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையிலோ முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தை மாற்றுவது குறித்து தீர்மானிக்கையில், நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, குரல் பதிவுக்கமைய பெரும்பான்மையைத் தீர்மானிப்பது உரியது அல்லவென்றும் இதில் வெளிப்படை தன்மை இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் விடுதலை முன்னணி இதில் கலந்துக்​கொள்ள மறுப்புத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் பிரச்சினையின்றி நாளைய அமர்வுகளை முன்னெடுக்க இதன் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.