எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய….

எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய
மதிப்பீட்டுப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை களத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறார் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கே.கம்ஸநாதன். பதிவு செய்யப்பட்ட 124 கடைகள் அழிவில் சிக்கியுள்ளன. 64 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன. 60 கடைகள் பகுதிச் சேதம் அல்லது பகுதி அழிவு. மொத்தமாக 124 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இழப்பு விவரங்களைத் தாமும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அத்துடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்குரிய இழப்பீட்டைப்பற்றியும் உடனடி நிவாரணத்தைப்பற்றியும் அரசாங்கத்திடமும் மாகாணசபையிடமும் அரசியற் தலைவர்களிடத்திலும் பொது அமைப்புகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம் என சந்தையின் வர்த்தகர் சங்கத்தலைவர் அ.ஜேசுராஜன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் ஒவ்வொருவருக்கும் இதற்கிடையில் கரைச்சிப் பிரதேச சபை தலா 20 ஆயிரம் ரூபா பணத்தை உடனடி நிவாரணமாக வழங்கியிருக்கிறது. இந்தத் தகவலை செயலாளர் கம்ஸநாதன் உறுதிப்படுத்தினார். இதைவிட யாழ்ப்பாணத்திலிருந்து அக்கினிச்சிறகுகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ பீட, பொறியியற் பீட மாணவர்களும் வேறு சில பொது அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்து வருகின்றனர்.

நீங்களும் உதவலாம். மனங்களும் கரங்களும் இணைவதே உலகச் சிறப்பு.

(Karunakaran)