‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு

“எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஆகவே, முதலமைச்சரின் இம்முயற்சிகளுக்கு வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முழு மலையக மக்களும் எத்தகைய கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் தத்தமது பூரண பங்களிப்புகளை வழங்க வேண்டியது, காலத்தின் அவசிய தேவையாக இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“‘எழுக தமிழ்’ பேரணி, அனைத்துத் தமிழ் மக்களின் பேராதரவுடன் பூரண வெற்றியைக் கொடுத்துள்ளது. இவ்விடயத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துகள், அனைத்துமே தமிழ் மக்களுக்கு மிக மிக முக்கியமானவையாகும். அவரது அக்கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது, அனைத்து இலங்கை தமிழ் மக்களனிதும் கடப்பாடாகும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மக்களின் ஆதரவின்றி ஆட்சியமைத்ததனால் வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைகள், அழுத்தங்கள் அரசாங்கத்தின் மூலமாக இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. அந்த அரசாங்கம், வட கிழக்கு மக்களின் பேராதரவுடன் தான், அமைந்தது. எமது மக்களின் கோரிக்கைளுக்கு உடன் செவிசாய்க்க வேண்டும்.

கடந்த 2009ம் ஆண்டில் நாட்டின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதமோ, யுத்தமோ இல்லாத நிலையில் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு, வடக்கு மக்கள் கோரவில்லை.

அம்மக்களின் தாயக பூமியிலிருந்து தான் இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். இராணுவ முகாம்கள் அங்கு அமைந்திருப்பதனாலும், யுத்த பூமியாக அவ்விடம் காட்சி தருவதினாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதனாலேயே, இராணுவ முகாம்களை அப்பகுதியிலிருந்தே அகற்றுமாறு மக்கள் கோருகின்றனர். இது அம்மக்களின் நியாய பூர்வமான கோரிக்கையாகும். மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுவதும் இதனையேயாகும்.

வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் “எழுக தமிழ்” பேரணியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனை பெரும்பான்மையின பேரினவாதிகள், இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கி, அதற்கான தவறான அர்த்தங்களையும் பிரசாரம் செய்து வருகின்றார்கள், இது தவறான விடயமாகும்.

மத்திய அரசாங்கத்தையோ, சிங்கள மக்களையோ, பௌத்த சங்கத்தினரையோ எதிர்த்து “எழுக தமிழ்” பேரணி நடாத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை, கரிசனைகளை, கவலைகளை, எதிர்நோக்கும் பிரச்சினைகளை, கண்டனங்களை வெளிப்படுத்தி, விழிப்புணர்ச்சியையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவுமே, “எழுக தமிழ்” பேரணி நடாத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கலை நிறுத்தி தமிழின அடையாளத்தை காக்க வேண்டுமென்ற வலியுறுத்தலையும் இப்பேரணி மேற்கொண்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம், உடன் விலக்கிக் கொள்ளப்படல் வேண்டுமென்றும், இறுதிக்கட்டபோரில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய, சர்வதேச விசாரணையை “எழுக தமிழ்” பேரணி வலியுறுத்தியுள்ளது.

இது போன்று அதிமுக்கியமாக தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்றே “எழுக தமிழ்” பேரணி வலியுறுத்தலும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையும் ஆகும்.

ஆகவே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் வெற்றியடையவும், “எழுக தமிழ்” பேரணியின் அழுத்தங்கள் நிறைவேறி, இவ்வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்ப வேண்டும் என்பதிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பூரண ஆதரவை வழங்கி வருகின்றது” என்றார்.