ஐ.தே.கவை எதிர்த்து உறுதியாய் நிற்குமாறு சு.கவினருக்கு ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும், அரசாங்கத்தைக் கொண்டுநடத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராக உறுதியாக இருக்குமாறு, பணித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மீன்பிடித்துறை அமைச்சர் அமரவீரவின் வீட்டில், செவ்வாய்க்கிழமையிரவு இடம்பெற்ற இராப்போசனத்தில், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதில், ஜனாதிபதியும் சிறிது நேரம் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த பிரியங்கர ஜயரத்ன, தனது துறையைச் சேர்ந்த ஐ.தே.க உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது எனத் தெரிவித்து, தனது பதவியிலிருந்து விலகிய பின்னணியிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அமரவீர, தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார். “எங்களது உறுப்பினர்களுக்கு, ஐ.தே.கவால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடினோர். உறுதியாக இருக்குமாறு, ஜனாதிபதி எங்களைக் கேட்டுக் கொண்டார்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மேலதிமாக அமைச்சர்கள், பதவி விலக மாட்டார்கள் என்று தெரிவித்த அமைச்சர் அமரவீர, தேசிய அரசாங்கம், தொடர்ந்தும் முன்செல்லுமெனவும் அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், ஏற்கெனவே கூறப்பட்டதன்படி அமைச்சர்கள் பலர் ஒன்றாகப் பதவி விலகினால் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடியைக் கருத்திற்கொண்டுமே, யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் செல்லவிருந்த ஜனாதிபதி, அப்பயணத்தை இரத்துச் செய்தார் என, அரசியல் வட்டாரத் தகவல்கள், முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.