புதிய ஆண்டில் வியூகங்கள் புதுப்பிக்கப்படுமா?..

புதிய ஆண்டில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உண்மை என்றால், 2016ல் தீர்வு என்ற எதிர்வு கூறலை நினைவில் கொண்டு எவரும் பழையதை கிளறக்கூடாது. அடுத்த கட்ட நகர்வை பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஒருமுகப்பட வேண்டும். நடக்கும் என நினைத்து நம்பிக்கை வைத்து முயன்றபின்னர், அது நடக்காவிட்டால் சோர்ந்து போகாதே என்பதை உறுதியுடன் நிகழ்த்திக் காட்டிய கஜனி முகமது, விடா முயற்சிக்கும் அதனூடான இறுதி வெற்றிக்கும், எமக்கான முன் உதாரண புருசன் ஆவார்.

தொடர் தோல்விகளால் சுருண்டு போன அவரை சிலந்தி பின்னிய வலையே சிந்திக்கத் தூண்டியது. ஒவ்வொரு தடவையும் தான் பின்னும் வலையை பூரணப்படுத்த, பலமுறை தவறி கீழே வீழ்ந்தும் சளைக்காது முயன்று இறுதியில் அதற்க்கு முழு வடிவம் கொடுத்த,

சிலந்தி பூச்சியின் செயல் தான் அவருக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து பன்னிரண்டு தடவைகள் தோல்வியை தழுவியவர் பதின்மூன்றாம் தடவையே வெற்றிவாகை சூடினார். நம்பினார் தோற்ப்பதில்லை என இறுதியில் வெற்றியும் கண்டார்.

தமக்கு வெற்றி நிச்சயம் என அரசர்கள் போரிட்டது போலவே, தீர்வு நிச்சயம் எனவும் அரசியல் தலைவர்கள் முயற்சி செய்கின்றனர். தோற்றுப்போக யாரும் விரும்புவதில்லை. தோல்வி நிச்சயம் என தெரிந்து யாரும் களம் காண முற்படுவதும் இல்லை.

நாம் வெல்வோம் என்ற எண்ணம் மட்டுமே அவர்களின் மூலதனம். முயற்சி மட்டுமே அவர்களின் ஆயுதம். பல இடர்கள் குறுக்கிடும் போது தம்மால் தடைகளை உடைக்க முடியும், அலைகளை கடக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களின் துடுப்பு.

தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமே நம்பி வாக்குகளை போட்டதால், எதிர்பார்த்துக் கிடைக்காத தீர்வு பற்றிய வாக்களரின் புலம்பல். பிரச்சனையின் தார்ப்பரியம் பற்றிய புரிதல் அற்ற, தெளிவற்ற, அறிந்து கொள்ள மறுக்கும் அவர்களின் மனநிலையால் தான் ஏற்ப்படுகிறது.

அரசியல் தலைமைகள் முதலில் தமது வெற்றியை பற்றித்தான் வியூகம் வகுக்கும் சூழ்நிலையே, ஆரம்ப காலம் தொடக்கம் தொடர்கிறது. மலையக தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்தால் தான், இடதுசாரிகளை தோற்க்கடித்து தனது அரசை அமைக்க முடியும் என, டி எஸ் சேனநாயக்கா வகுத்த வியூகம் போலவே,

தான் பதவிக்கு வரவேண்டுமென்றால் சிங்களம் 24 மணிநேரத்தில் அரச கரும மொழியாகும் என பண்டாரநாயக்கா வியூகம் அமைத்தார். எதிர்க்கட்சி தலைமை தமிழர் வசம் இருந்ததால் அவர்களை 6வது திருத்தம் கொண்டு, அடிபணிய வைக்க ஜே ஆர் ஜெயவர்த்தன முயன்றார்.

இரட்டை கோபுர தாக்குதல் மூலம் அமெரிக்கா அடைந்த சீற்றத்தை தனக்கு சாதகமாக மாற்றினார் மஹிந்த. அதுவரை வெல்ல முடியாத யுத்தத்தை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பை அமெரிக்கா தன் கையில் எடுத்ததன் விளைவாக, அது எமது இன விடுதலை போராட்டத்துக்கும் முள்ளிவாய்காலில் முடிவுரை எழுத வழிவகுத்தது.

ஆக தீர்வுகளை பற்றிய சிந்தனை இன்றி, ஒற்றுமை பற்றிய நோக்கம் இன்றி, சக இனங்களின் கோரிக்கைகள் பற்றிய புரிதல் இன்றி, அவர்களிடையே சமத்துவம் பேணல் வேண்டும் என்ற எண்ணம் இன்றி, தமக்கான வெற்றி வேண்டிய வியூகங்களே வகுக்கப்படுகின்றன.

சிங்களத்தின் இந்த சிந்தனைக்கு நாமும் சளைத்தவர் அல்ல என்று ஏட்டிக்கு போட்டியாக தமிழர் தரப்பும் செயல்ப்படுகிறது. அன்னியர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் செல்லமுடியாவிட்டாலும், ஒற்றை ஆட்சியில் அதிகாரப்பரவலாக்கல் ஏற்புடையதே.

அதைப்பற்றிய விசேட ஏற்பாடுகளை பிரித்தானியாவிடம் முன்மொழிவதை தவிர்த்து ஆட்சியில் 50/50 கோரிக்கை முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. தனது முயற்சிக்கு கூட இருந்தவரே சிங்களத்துடன் கைகோர்த்து குழிபறித்த கோபத்தில், ஜீ ஜீ பொன்னம்பலம் தன் வியூகத்தை மாற்றினார்.

சேனநாயக்க அரசில் அமைச்சராகி பிரஜா உரிமை சட்டத்துக்கு ஆதரவு வழங்கினார். இன்று இந்திய வம்சாவளியினருக்கு இழைக்கப்படும் அநீதி நாளை இலங்கை தமிழருக்கும் ஏற்ப்படும் என கூறித்தான் எஸ் ஜே வி செல்வநாயகம் புது வியூகம் வகுத்தார்.

அது ஒற்றை ஆட்சிக்குள் சமஸ்டி முறை. ஆனால் அதிலும் தமிழ் அரசு கட்சியின் கோரிக்கையாகவே சமஸ்டி அதிகாரம் கோரப்பட்டது. சிங்களத்துக்கு ஒருமுகம், தமிழருக்கு ஒருமுகம் போலவே இது அடையாளம் பெற்றது. தமிழ் அரசு என்ற பதம் சிங்களத்தின் மனதில் சந்தேகத்தை விதைத்தது.

அதனால் தான் இன்றுவரை சமஸ்டி என்ற தமிழரின் கோரிக்கை பிரிவினைக்கான மூல உபாயம் என சிங்களம் பயப்படுகிறது. காரணம் சமஸ்டி அடிப்படையில் இரண்டு ஒப்பந்தங்கள் பண்டா, டட்லி யுடன் செய்தும் அவை நடைமுறை சாத்தியம் ஆகாத போது,

அதற்க்கான தொடர் போராட்டங்களில் சலித்து போனபின், புது வியூகமாக தனித் தமிழ் ஈழத்துக்கான ஆணையை முன்வைத்து நிகழ்வுகள் நடந்தேறின. இது சிங்களத்தின் சமஸ்டி மீதான சந்தேகத்தை வலிதாக்கியது.

சமஸ்டி என்றால் பிரிவினை என்ற எண்ணம் உறுதி செய்யப்பட்டது. மறுபுறம் சமஸ்டியை கைவிட்ட தமிழர் தரப்பு, தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என மார்தட்டியது. தரப்படுத்தல் தந்த வேதனையில் வெதும்பிய இளையவர் ஆயுதங்கள் தீர்வை தரும் என நம்பினர்.

தூண்டிவிட்ட தமிழ் தலைமைகள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். முள்ளிவாய்க்கால் வரை பல வியூகங்கள் வகுத்த பிரபாகரன், சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டார். அவரின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறிய விடயம் பற்றி

டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் குறிப்பிடுகையில் ‘’வீரமார்த்தாண்டனுக்கு ஒன்றும் விளங்குதில்லை. சர்வதேசம் ஒன்றாய் கூடி மொத்தப் போகுது’’ என கவலைப்பட்டதாக கூகிறார். இங்கு ஒரு விடயம் மட்டுமே தெளிவாக உள்ளது.

தமிழ் அரசு கட்சி சமஸ்டியை கேட்டு பின் தமிழர் விடுதலை கூட்டணி ஆனபின், தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்டது போலவே, தனித் தமிழ் ஈழத்தை ஆயுத போராட்டம் மூலம் அடையும் நோக்கில், இந்தியாவையே எதிர்க்க துணிந்த பிரபாகரனால் வியூகத்தை மாற்ற முடியவில்லை.

அது அவரின் விருப்பு தெரிவா, அல்லது அவரை போற்றி துதி பாடியவரின், சுயலநலக் குழிபறிப்பா என்ற சந்தேகம், எனக்கு இன்றளவும் உண்டு. காரணம் ராஜீவ் காந்தி அவர்களுடனான பெங்களூர் மற்றும் டெல்கி சந்திப்புகளில் பிரபாகரன் விரும்பியது, தனது தலைமையின் கீழ் கிடைக்கும் தீர்வை மட்டுமே.

ஏனைய இயக்கங்கள் உட்பட முன்னைய அரசியல் தலைமைகளை எவரும் கணக்கில் எடுப்பதை அவர் விருப்பவில்லை. அதனால் சுதுமலையில் இந்தியாவை நம்புவதாக கூறியவர், ஏனைய இயக்கங்கள் பிரசன்னம் பற்றி அறிந்ததும் வியூகத்தை மாற்றினார். இந்தியாவை எதிர்த்தார்.

வடக்கு கிழக்கு மாகாண சபை செயல்ப்பட தொடங்கியதும், வியூகத்தை மாற்றி, தன்னை தக்கவைக்க இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாசாவுடன் உறவு கொண்டு, அவரின் ஜனாதிபதி பதவியை காப்பாற்ற ஈரோஸ் எம் பி க்களை மீண்டும் பாராளுமன்றம் பிரவேசிக்க வைத்தார்.

வியூகங்களை மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவர் எப்படி நந்திக்கடலில் மாட்டி மரணித்தார் என்ற கேள்விக்கான விடையை, கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல நெடுமாறன்களும், வை கோ க்களும், சீமான்களும், சிதம்பரம்களும் மட்டுமே அறிவர். அதுபற்றிய உண்மையை யாமறியோம் பராபரமே.

அமெரிக்காவும் நோர்வேயும் காப்பற்ற முயன்றும், இந்தியா விடவில்லை என்கின்ற செய்தியில் இருந்து இந்தியாவின் பிராந்திய நலன்கள் சார்ந்த அதன் கொள்கைக்கு வெளியே இந்து சமுத்திர பிராந்தியத்தில் எதுவும் சாத்தியம் இல்லை என்பது தெட்ட தெளிவான விடயமாகிறது.

ஈழப்போராட்டம் ஆரம்பமானபோது இந்தியா எம்மவருக்கு தந்த ஆயுதப்பயிற்சி கூட அதன் பிராந்திய நலன் சார்ந்ததே. ஜே ஆர் தன்னை அமெரிக்கா ஆதரவாளராக நிலைநிறுத்த முற்பட்டவேளை அந்த யானை தன் சொல்கேட்டு நடக்க, இந்திரா காந்தி அம்மையார் கையில் எடுத்த அங்குசம் தான் எம் போராட்டம்.

தவிரவும் அவர் நாட்டின் பிரிவினைக்கு உதவுவார் என கணக்குப் போட்டது எம்மவர் தவறு. இந்திய மாநிலங்கள் போலவே இலங்கையிலும் அதிகாரப் பரவலாக்கல் பற்றித்தான் அவரின் தூதுவரான பார்த்தசாரதி அவர்கள், ஜே ஆர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட இந்திய பிராந்திய நலன் சார்ந்ததே. ஆனால் அதனூடாக எமக்கான அதி உச்ச பலாபலன்களை, அதிகார பாகிர்வை அடையக்ககூடிய சாத்தியமும் இருந்தது. ஆனால் பிரபாகரன் தான் வகுத்த தனது வெற்றிக்கான வியூகத்தை மாற்ற இயலாது போனதால் அவர் இந்திய அமைதிப்படைக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தார்.

அன்று இடைக்கால நிர்வாக சபை பெரும்பான்மை, பிரபாகரனிடமே கையளிக்கப்பட்டது. மொத்தம் 12 உறுப்பினர்களில் ஐந்து பிரபாகரன் வசம். 2 ஆசனங்கள் மட்டுமே தமிழர் விடுதலை கூட்டணிக்கு. சிங்களவருக்கு 2. முஸ்லிம்களுக்கு ஒதுக்கிய இரண்டு ஆசனத்தில் கூட ஒருவர் பிரபாகரன் தெரிவு. நிர்வாக தலைமை கூட பிரபாகரன் தெரிவே.

தலைமை உட்பட 7 ஆசனங்களை பெற்ற பிரபாகரன் அதன்படி தனது வியூகத்தை வகுத்து தமிழ் மக்களின் நிரந்தர உரிமைகளை பெறுவதை விடவும், தனது பிரிவினை கொள்கை மூலம் தனது வெற்றியை உறுதி செய்வதிலேயே முனைப்பை காட்டினார்.

உண்மையில் அவர் தன் தெரிவுகள் மூலம் இடைக்கால நிர்வாகத்தை ஏற்றிருந்தால் அவரின் பின்னால் மக்கள் அணிதிரண்டிருப்பர். விடுதலை புலிகள் பற்றிய என்ன விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவர்களின் மீதான மக்களின் ஆதரவும் கணிசமாக இருந்ததும் உண்மை.

நிலைமைகளை கவனத்தில் கொண்டு தனது வியூகத்தை பிரபாகரன் மாற்றி இருந்தால், அது மேலும் பெருகுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்திய படைகளின் பிரசன்னம், இலங்கை படைகளின் முகாம்களுக்கு உள் முடக்கம். இடைக்கால நிர்வாகம்,

போராளிகள் பராமரிப்புக்கு மாதம் ஐம்பது லட்சம் ரூபா இந்திய நிதிப் பங்களிப்பு, அத்தனையும் பிரபாகரன் கவனத்தில் எடுபட்டிருந்தால், அடுத்து வரவிருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவை பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

தமிழ் ஈழம் மட்டுமே வியூகம் என்பதால் அதிகார பரவலாக்கல் அவரின் கவனத்தில் படவில்லை. அதனால் இந்தியாவின் பிராந்திய நலன் பற்றிய அவரின் ஆலோசகர் சொன்ன விடயங்களையும், அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அன்று மட்டமல்ல இறுதியில் ஒஸ்லோவில் எட்டப்பட்ட தீர்வை கூட ஏற்கும்படி ஆலோசனை கூற முடியாது மௌனியானார் அவரின் பிரம்ம குரு, தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம். வெற்றிக்கான வியுகங்களை வகுக்கும் தலைமைகள் மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக கொண்டே வகுப்பதால் விளையும் வினைகள் தொடர்கின்றன.

சமஸ்டி என்றால் அது பிரிவினை என்று ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்களமும், தமிழ் ஈழம் தான் இறுதித் தீர்வு எனக்கூறியதால் களப்பலி கொடுக்கப்பட்டவரும், மாற்று வியூகங்களின் போது தடுமாற்றத்துக்கு காரணமாகின்றனர். இதற்குத்தான இத்தனையும் இழந்தோம் என்பவர் நாம் தொடர்ந்தும் இழந்து கொண்டே போவதை சிந்தையில் கொள்வதில்லை.

திருகோணமலை பறிபோகிறது என்ற புலம்பல் இன்று மட்டக்களப்பு ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதில் வந்து நிற்கின்றது. வடக்கின் பெரும் நிலப்பரப்பு இராணுவத்தின் வசம். இழப்புகள் தொடராதிருக்க மாற்று வியூகங்கள் இன்றி, வீம்பு அறிக்கைகள் மட்டுமே வெளிவருகின்றன.

நிலைமையின் கனதி கருதி மக்களிடம் யதார்த்த நிலைமை பற்றிய உண்மையை தெளிவுபடுத்த தலைமைகள் தயங்குகின்றன. தமது தேர்தல் வெற்றிக்கான வியூகம் தோற்றுப்போகக் கூடாது என்பது மட்டுமே அவர்களின் சிந்தையில் உள்ளது.

அரசியலோ, ஆயுதமோ மக்களின் சகஜ வாழ்வுக்கான வழிமுறை கொண்ட வியூகங்களை மட்டுமே வகுக்கவேண்டும். மாறாக இருப்பதையும் அவர்கள் இழக்கும் நிலைக்கு தள்ளக்கூடாது. உணர்ச்சிகளை மட்டும் தூண்டி அவர்களை அரசியல் மலடாக்கக் கூடாது.

சர்வதேச அரசியல் சூழல், மற்ற இனங்களின் மனநிலை, பிராந்திய வல்லரசின் நிலைப்பாடு, உலக மயமாக்கலின் தாக்கம் என்பன பற்றிய, கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகள் பரவலாக நடத்தப்பட வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற புரிதலுக்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமான விடயங்கள் அலசி ஆராயப்பட வேண்டும்.

கிடைக்கும் தெளிவின் அடிப்படையில் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்க்கான தெளிவூட்டல் மக்கள் மத்தியில் பகிரங்கப்பட வேண்டும். யுத்தத்தில் தோற்று விட்டோம் என கூறாது, நாம் வெற்றிகரமாக பின்வாங்குகிறோம் என்றார் வின்சற் சேர்ச்சில்.

உடன் அடையக்கூடியதை அடைவதும் அதைக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வதும் சாணக்கியம். நாம் எடுத்த முடிவை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்தல் சாமர்த்தியம். எமது மக்களுக்கு ஏற்ப்படும் அழிவுகளை, மண்ணில் ஏற்ப்படும் ஆக்கிரமிப்புகளை தவிர்ப்பதற்கு, மாற்று வியூகங்கள் ஏற்புடையது என்றால், அதனை பரீட்சித்து பார்க்கையில் எழும் விமர்சனங்களுக்கு அஞ்சத்தேவை இல்லை.

அன்று பிரபாகரன் இந்திய தலையீட்டை ஏற்றிருந்தாலோ, அல்லது ஒஸ்லோ உடன் படிக்கையை வரவேற்றிருந்தாலோ இந்திய பிராந்திய நலனும், சர்வதேச நடவடிக்கையும் ஈழத் தமிழருக்கு எதிராக செயல்பட்டிராது. சொந்த மண்ணில் பூரணத்துவம் பெற்ற உரிமைகளுடன் எம் இனம் வாழ கிடைத்த சந்தர்ப்பங்களை, தமது வெற்றிக்கான வியூகங்களால் தொலைத்தவர் எம் தலைமைகளே!

உண்மையில் வேலுப்பிள்ள பிரபாகரன் என்பவர் ஒரு குறியீடு மட்டமே. மற்றப்படி உணர்சிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட பல பிரபாகரன்கள் எம்மிடையே உண்டு. அழிவுகளை பற்றி கவலைப்படாத, ஆக்கிரமிப்பு பற்றிய புரிதல் இல்லாத புலம்பெயர் தேசத்தில் வாழும் இவர்களே, இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கான நிதி மூலங்கள்.

சாட்டைகள் எப்போதும் அங்கிருந்து சுழலும். இங்குள்ள தலைமைகள் தலையசைத்து செயல்ப்படும். வாக்களித்தவன் பழத்தை பறிகொடுத்த பழனி ஆண்டவர் கோலத்திலும், வென்றவர் குங்குமப் பொட்டு முதல்வராக பட்டுவேட்டி சால்வையில் தலையில் கிரீடம், கையில் வேல் கொண்டு வெற்றிக்களிப்பில் பூரித்து புளகாங்கிதம் கொள்வதை, ஏமாந்த சோனகிரிகளாக சாமானியர் பார்த்திருப்பார்.

புதியஆண்டுகள் பிறக்கும். புதியவாக்குறுதிகள் வழங்கப்படும். ஆனால் தீர்வு மட்டும் வெகுதூரத்திலா?…
– ராம் –