‘கடவுள்’ பெயரில் பலாத்காரம் செய்த குர்மீத்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலப்படுத்திய 2 பெண் சாட்சிகள்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னை கடவுளாக கூறி பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. பலாத்கார வழக்கில் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு 2 பெண்களின் சாட்சியம்தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் குர்மீத் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். குர்மீத் ராம் எப்படி எல்லாம் பெண்களை தனது வலையில் சிக்க வைத்தார் என்பதை நீதிபதியிடம் விவரித்துள்ளனர்.

ஆசிரமத்தில் உள்ள பாதாள (அண்டர்கிரவுண்டு) அறையில்தான் குர்மீத் ராம் தங்கி வந்துள்ளார். அந்த அறைக்கு பெண் சீடர்களை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளார். தன்னை கடவுள் என்றே கூறிக் கொண்டு, பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். குர்மீத் ராம் புகழ் பெற்ற ஆன்மிக தலைவராக விளங்கியதாலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவரை மிகவும் மதித்ததாலும்தான் ஏராளமான பெண்கள் அந்த ஆசிரமத்தில் தங்க முன்வந்தனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகசிய வார்த்தை மன்னிப்பு

சாட்சியம் அளித்தவர்களில் ஒருவர் ஹரியாணா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர். இவர் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி சிபிஐ நீதிபதி ஏ.கே.வர்மா முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “1999-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆசிரமத்தில் தங்கினேன். அப்போது, ஆசிரமத்தில் பெண் சீடர்கள், ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை ரகசிய குறியீடாக பயன்படுத்தி வந்தனர். என்னிடமும், ‘பிதாஜி மன்னிப்பு கிடைத்துவிட்டதா’ என்று பெண் சீடர்கள் கேட்டனர். அப்போது அதற்கான அர்த்தம் தெரியவில்லை.ஆகஸ்ட் 28-ம் தேதி குர்மீத் என்னை அவரது அறைக்கு அழைத்து பலாத்காரம் செய்த போதுதான் மன்னிப்பு என்பதற்கான அர்த்தம் புரிந்தது” என்றார்.

சிர்சா நகரைச் சேர்ந்த மற்றொரு பெண் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி நீதிபதியிடம் கூறியபோது, “1998-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆசிரமத்தில் சேர்ந்தேன். 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்னை அவரது அறையில் பலாத்காரம் செய்தார்” என்றார்.