பரபரப்பான சூழலில் சென்னை வந்தார்: ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் திமுக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு – சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்த திட்டம்

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். அவரை திமுக எம்எல்ஏக்கள் இன்று காலை 10.30 மணிக்கு சந்திக்கின்றனர். அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துவிட்டது. முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22-ம் தேதி ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். கடிதத்தை பெற்ற அவர் அன்றே மும்பை சென்றுவிட்டார். அதன்பின், தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது.

முதல்வர் பழனிசாமிக்கு எதிரான எம்எல்ஏக்கள், எம்பிக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று சென்னை வருகிறார். அவரை வரவேற்பதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை மும்பையில் இருந்து சென்னை வந்தார்.

19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தன. இந்நிலையில், சென்னை வந்துள்ள ஆளுநரை சந்திக்க திமுக சார்பில் நேரம் கோரப்பட்டிருந்தது. அவர்களுக்கு இன்று காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்கின்றனர். அப்போது, சட்டப்பேரவையை கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநரிடம் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை வரவேற்பதற்காக, ஆளுநர் வி்த்யாசாகர் ராவ் விமான நிலையம் செல்கிறார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் குடியரசு துணைத் தலைவரை வரவேற்க செல்வதாக கூறப்படுகிறது.