கடும் மழை காரணமாக…..: 26 பேர் பலி: 42 பேரை காணவில்லை

கடும் மழை காரணமாக, களுகங்கை, களனி கங்கை, கின் கங்கை, நில்வல கங்கை மற்றும் அட்டங்களு ஓயா ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் 7 மாவட்டங்களில் 2811 குடும்பங்களைச் சேர்ந்த 7856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.

சீரற்றக் காலநிலை காரணமாக, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.

புளத்சிங்களவின் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால், 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளத்சிங்கள போகஹாவத்தையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, புளத்சிங்கள, கொபவக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

களுத்துறை, பதுரிலியவில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த, ஹெய்யன்தடுவவில் மண்மேடோடு சேர்ந்து, பாரிய மதில் வீடொன்றின் மீது உடைந்து விழுந்ததில், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி வீட்டில் வசித்து வந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.

இதேவேளை, அவிசாவளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். மேலும், இரத்தினபுரியில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

அதிக மழை காரணமாக, இரத்தினபுரி , காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழக்கியுள்ளன.

இந்நிலையில், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்து உதவிகளை பெறுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொடர்பு இலக்கங்களான 0112136226, 0112136136 மற்றும் 0773957900 ஆகிய இலக்கங்கள், 24 மணித்தியாலங்களும் சேவையில் இருக்குமென மேற்படி நிலையம் அறிவித்துள்ளது.

பிராந்தியங்களில், மேற்படி நிலையத்தின் அதிகாரிகளாக கடமையாற்றுபவர்களின் அலைபேசி இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் மேற்படி நிலையம் வெளியிட்டுள்ளது. அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தினால் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று அந்நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு- கே.ஏ.நந்தசிறி (0112325511/ 0112437242/ 0778819383)

காலி-ஏ.சேதர (0912247175/ 0771761692)

கம்பஹா – குசுமிசிறி (0332234142/ 0332222900/ 0771761692)

களுத்துறை -கிறிசான் (0776368763)

மாத்தறை விதானகே (0412222284/ 0718245180)

இரத்தினபுரி கே.குமார (0452222233/ 0452222140/ 0714408835)

இதேவேளை, வெள்ளம் மற்றும் வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உதவியை பெறுவதற்காக, 0112343970 என்ற இலக்கத்தினூடாக, படைவீரர்களின் உதவியை பெற முடியுமென்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.