கண்ணீர் அஞ்சலி

 

வவுனியா பூவரசங்குளதில் 18.03.1959 இன்று பிறந்தவரும் புழல் இலங்கை அகதிகள் முகாமில் 1990 முதல் வசித்து வந்தவருமான தோழர்அர்ஜீன் 11.10.15 அன்று உடல் நலக்கோளாறு காரணமாக புழல் அகதிகள் முகாமில் இயற்கை எய்தினார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களுக்கு பசியாற சமைத்துப் போட்டது மட்டுமல்லாமல் கட்சிப்பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்.நோய் வாய்ப்பட்ட காலங்களிலும் அவர் புழல் முகாமில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு தவறாது சமூகம் தருபவர். கட்சியையும் தோழர்களையும் என்றும் மதித்து நடப்பவர். அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடுப்பத்தாருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பத்மநாபா.-ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும் , சிறந்த சமையல் கலைஞருமான தோழர் பொன்னன் என்கிற அர்ஜுனன் இன்று சென்னையில் உள்ள புழல் அகதிகள் முகாமில் உடல் நலக் குறைவால் காலமானார்.

வன்னி மாவட்டத்தில் இருந்து ஈழவிடுதலைக்காய் தன்னை அர்பணி
த்த தோழர்களில் முக்கியமானவர். நகைச்சுவைப் பேச்சாலும் சமையல் கலையாலும் தோழர்களிடம் மிகுந்த அன்பைப் பெற்றவர். அவரது சமையலின் சுவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
நானும் என்னோடு சில தோழர்களும் முதல் முதலில் இந்தியா வருவதற்காய் மன்னாரில் முகாமிட்டிருந்த வேளைகளில் தோழரின் சமையலை சுவைக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

முகாமில் வயதில் மூத்தவரான அவரது சமையலை சுவைத்துக் கொண்டே”அர்ச்சுனன் தோழரே …இந்த வயதில் உங்களுக்கு என்ன ஒடுக்குமுறை இருந்து போராட்டத்துக்கு வந்தீர்கள்” என்று தோழர்கள் கேட்டுக் கிண்டல் செய்வதுண்டு. அதற்கு அவர் சொல்லும் வேடிக்கையான பதிலை இங்கு சொல்வது அழகல்ல என்பதால் உங்கள் கற்பனைக்கே அந்தப் பதிலை விட்டு விடுகிறேன்.

ஈழப் போராட்டத்தில் அர்பணிப்பு உணர்வோடு இணைந்து , போராட்டக் காலத்திலும் கலப்பாகவே வாழ்ந்து, போர் அனர்த்தங்களால் தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்து நோயின் பிடியிலும் வறுமையின் பிடியிலும் இறுதிப் பொழுதுகளைக் கழித்து இந்தியமண்ணில் அகதிகள் முகாமில்தன வாழ்வை முடித்துக் கொண்டான் இந்த மூத்தவன்.

நாமும் வழமைபோல் அஞ்சலிப் போஸ்டருடன் இறுதி அஞ்சலிக்காய் தயாராகி நிற்கிறோம். உலகெல்லாம் பரந்துவாழும் தோழர்களும் எனது முகநூலை பார்க்க நேர்ந்தால் ஒரு லைக்கோ , rip யோ அனுப்பக் கூடும். சிலர் வருந்தக் கூடும். யார் வருந்தி என்ன…தோழன் இறந்துவிட்டான். அவனது குடும்பம் மீண்டும் வறுமையின் பிடியில் தவிக்கும்.