சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை

(சுகு-ஸ்ரீதரன்)

எவ்வாறானதோ இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகள் நிகழவேண்டியிருக்கின்றன. அவ்வாறு இல்லாது இலங்கையினுள் மாத்திரம் நிகழவேண்டும் என என கருதுவதெல்லாம் சற்று பாமரத்தனமான சிநதனைப்போக்காகும். நீண்டகால யுத்தம் சமூக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளிகளைக் குறைத்து அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பனவெல்லாம் சிதைவடைந்ததும்- அகங்காரமானதும் -ஊழல் நிறைந்ததும் -அதிகார துஸ்பிரயோகம் சமூகத்தின் மீது பலாத்கார பிரயோகம் இவற்றைக் கொண்ட அதிகார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.

இவற்றின் நிழலாக சமூகத்தினுள்ளும் பாலியல் பலாத்காரம், சிறுவர் து~;பிரயோகம் ,போதை வஸ்து –கொலை, கொள்ளை பெண்கள் மீதான வன்முறை என்பவற்றை பிரயோக்கிகும் பிரமாண்டமான மக்கள் விரோத சக்திகளை உருவாக்கியுள்ளது.

அற- தார்மீக விழுமியங்கள் சிதைவடைந்து பாதுகாப்பு புலனாய்வு அதிகார அமைப்புக்கள் இதர அதிகார நிர்வாக கட்டமைப்புக்களிலும் சித்திரவதை மற்றும் படுகொலை செய்தல் அதிகார மமதை என்பன 4 தசாப்தங்களாக காணப்பட்டன. இந்த விபரீத நிலை இலங்கைக்கு பழக்கப்பட்ட சகஜமான விடயமாகி விட்டிருக்கிறது.

எனவே மனித உரிமை ஜனநாயகம் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இவற்றை நிர்மாணம் செய்யும் விதமாக பாரிய சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்றன.

பொதுமக்களுடனான உறவுகளை இவ்வாறு தான் கையாள்வது இதுதான் வழமை என்பது போல் சமூகம் மற்றும் தனிமனிதர்களின் சுயமரியாதை கௌரவத்தின் மீது சவால் விடுக்கும் விதமாக இந்த அதிகார யந்திரங்கள் கடந்த 4 தசாப்தத்திற்கு மேல் இயங்கி வந்திருக்கின்றன.

தெற்கில் நடந்த கிளர்ச்சிகளின் போதும்- வடக்கு கிழக்கை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்ட நீண்ட யுத்தத்தின் போதும் இந்த சிதைவியக்கம் இடையறாது நிகழ்ந்து கொண்டிருந்தது.

காணாமல் போதல் காலவரையறையின்றி வதைமுகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைத்தல்- இனவாதம் -மதத்துவேசம் என்பன இயல்பான விடயங்கள் போல் மாற்றப்பட்டிருக்கின்றன.

யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் இந்த மனோபாவம் இலங்கையின் அதிகார கட்டமைப்பில் நிலைத்து இறுகி விட்டது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெவ்வேறு மக்கள் விரோத வளர்ச்சிக்கு தடையான குழுக்கள் உருவாவதற்கும் இது வழிவகுத்தது.

சமூகத்தில் உறைய வைக்கப்பட்ட பீதி நிலையை இந்த சக்திகள் தமது நலன்களுக்காகப் பாவித்தன.

இதன் காரணமாகத்தான் பல்லின மக்களும் சேர்ந்து அசைக்க முடியாது என்று கருதிய சக்திகளைத் 2015 இல் தூக்கி வீசினார்கள்.

மக்கள் மீது தமது அதிகாரத்தை கிடுகிப் பிடியை சர்வாதிகாரத்தை கெடுபிடியை அதிகரிக்க நீண்ட குறுகிய காலத்தில் இந்த சக்திகள் தூக்கி வீசப்படும் என்பதெல்லாம் வரலாற்று விதி.

2009 ,2015 அரசியல் நிகழ்வுகள் இவ்வாறு தான் அமைந்தன.

அரசியல் சமூக சீர் திருத்தங்களை செய்வதற்கு உள்நாட்டின் போதாமை எமது நீண்ட அனுபவமாகும்.

அற உணர்வு -துணிச்சல்கொண்ட இலங்கையர்கள் பல சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள்- நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். காணாமல் போக்கடிக்கப்பபட்டு அல்லது பகிரங்கமாகவே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனவே நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியமானது.

அந்தவகையில் சர்வதேச நீதி மற்றும் சட்ட மனித உரிமை அமைப்புக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

சாதாரணமாகவே பார்ப்போம்.

இலங்கையின் அதிகாரபகிர்வு தொடர்பான உரையாடல் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்கிறது.

ஆனால் 13 வது திருத்த சட்டம் பெயரவில் தன்னும் கடந்த கால்நூற்றாண்டுகளாக இன்றளவில் நடைமுறையில் உள்ளது.

அதுவும் இந்திய தலையீட்டினால் அல்லாமல் வேறு வழிகளில் நிகழவில்லை.

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் 1950களின் நடுப்பகுதி 1960களின் நடுப்பகுதி 1980களின் முற்பகுதி 1990 களின் நடுப்பகுதி 2000ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் முயற்சிக்கப்பட்டபோதும் அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை.

இவ்வாறுதான் காலாகாலத்திற்கு நடந்த மனித உரிமை மீறல்கள் கலவரங்கள் தொடர்பாகவும் இலங்கையின் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் செயற்படுத்தப்படாமலும் வெறும் அறிக்கைகளாக குப்பைக் கூடையில் போயின.

2015 ஜனவரியில் நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டப்படவில்லை.

ஆனால் ஜெனிவாவின் பின்னரே இது தீவிர கவனத்திற்குரியதாகியது.

இன்பம் -செல்வத்திலிருந்து பிரகித் எகனிய கொட காணாமல் போனது வரை இந்த சட்டதின் கீர்த்தி சர்ச்சைக்குரியது. அவமானத்திற்குரியது.

இந்த சட்டத்தின் வரலாறு இரத்தம் தோய்ந்த குரூரமானது.

13 வதன் கீழான அதிகாரப் பரவலாக்கலுக்கான விடயங்கள் கடந்து வந்த கால்நூற்றாண்டுகளில் வெட்டிக் குறுக்குவதில் இருந்த ஆர்வம் பயங்கரவாதடைச்சட்டத்தை வலுவற்றதாக்குவதில் இருக்கவில்லை.

இந்த சட்டம் வந்த நாள் முதல் இந்த நாள் வரை அப்படியே இருக்கிறது.

நெல்சன் மண்டெலா சிறையில் வாழ்ந்த காலத்தை விட அதிகமான காலம் பலரும் சிறையில் வாழ்வதற்கு இந்த சட்டம் கவசமாக அமைந்திருக்கிறது.

இலங்கையின் அரசியல் நிர்வாக கட்டமைப்பு மனித உரிமை ஜனநாயக நிறுவனங்கள் செயற்படுவதற்கான இடைவெளியைக் கொண்டிருந்தால் தான் இலங்கையில் அதிகாரப் பகிர்வு நிகழ்வதற்கும் சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான நிலைமைகளை ஸ்தாபிக்க முடியும்.

ஜே. ஆர் தொடக்கம் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகித்த நிரஞ்சன் தேவ ஆச்சாரியா வரை இலங்கையை சிஙகப்பூர் ஆக்குவது பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் சிங்கப்பூர் எப்படியோ தெரியாது. ஆனால் இலங்கையின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தப் படாதவரை மக்களின் வாழ்வு கண்ணியமானதாக அமையாத வரை இந்த சமூக பொருளாதார அதிசயங்கள் சாத்தியமாகாது.
•வடக்கு கிழக்கில் தலைவரை இழந்த பெண்கள் மாத்திரம் தலைமைதாங்கும் குடும்பங்கள் பற்றிய பிரக்ஞை
•அகதி முகாம்களில் வாழ்வின் பெருங்காலத்தை ஓட்டியவர்கள் -ஓட்டுகிறவர்கள்
•சிறைகளில் வாடுபவர்கள்
•காணாமல் போனவர்கள்
•இழப்புக்களால வறுமையின் பிடியில் திணறுபவர்கள்
•அனாதரவானோர்
•வேலையற்ற இளம் தலைமுறை
•எமது பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் உற்பத்தி செய்து வேலையற்றிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம்
•மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வு தொழில்
•மத்திய கிழக்கில வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்பபட்டிருக்கும் பெண்தொழிலாளர்கள்
பற்றிய பிரக்ஞை வேண்டும்.

ஊழலும் அதிகார போதையும் கொண்ட எமது நிர்வாக யந்திரம் முடிமுதல் அடி வரை சீpர் திருத்தப்படவேண்டியிருக்கிறது.

உள்நாட்டில் போதாமைகள் காணப்படுகின்றன.

காலனியாதிக்க காலத்திலிருந்து பழக்கபட்ட அதிகார அகங்காரங்கள் இன்றளவும் நிலவுகிறது.

கிராமசேவையாளர் மற்றும் பொலிஸ்நிலையம் என்பன இயன்றளவு தவிர்த்துக் கொள்ள வேண்டிய கெடு பிடி நிறைந்த கட்டமைப்புக்கள் என்ற அபிப்பிராயமே பெருவாரியான மக்களிடம் காணப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்த கட்மைப்புக்களில் தாக்கமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்க வேண்டும்.

எனவே மக்களின் உரிமைகள்- ஜனநாயகம் பற்றிய பயிற்சிகள் கற்கை நெறிகள் அவசியப்படுகின்றனஇவை எமது ஆசிரியர்கள் சுகாதார போக்குவரத்து மற்றும் இதரை சேவை நிர்வாகத்துறைகளில் இருப்பவர்களுக்கும் தேவைப்படுகின்றன.

மக்களுடன் ஏதோ ஒரு அளவில் வன்முறை சார் உறவு கொண்டவையாகவே இவை இருக்கின்றன.இதனால் தான் இவற்றுக்குப் பிரதியீடாக வன்முறைகள் சமூகத்தில் தோற்றம் பெறுகின்றன.எனவே ஜனநாயக அரசியல் நிர்வாக மறு சீரமைப்பு -மனித உரிமை நிலையை மேம்படுத்;துவதில் சர்வதேச அனுபவங்கள் தேவைப்படுகின்றன.

எனவே சர்வதேச துறைசார் நிபுணர்கள் அறிஞர்கள் செயற்பாட்டாளர்களுடன் இலங்கையின் நிறுவனங்களும் இணைந்து செயற்படவேண்டிய அவசியம் இருக்கிறது. சர்வதேச அனுபவங்கள் ஆலோசனைகள் உள்வாங்கப்படாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டமுடியாது.மனித உரிமை -ஜனநாயகம் இன சமூகங்களின் உரிமைகள்- உறவுகள் பற்றிய கலந்துரையாடல் சகல மட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும்.

இரத்தம் தோய்ந்த வரலாற்றின் உள்ளார்ந்த உண்மை நிலையை கண்டறிந்து பாதிக்கபட்டவர்களிற்கு இயலுமாவரை நீதி நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படவேண்டும். வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்களுடன் தொடர்புடையவர்கள் இயலுமான வரை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நீதி நிலைநாட்டப்படுவதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று மக்கள் உணரும் அளவிற்கு இது நிகழவேண்டும்.

ஏதிர்காலத்தில் இவை நிகழாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யபடவேண்டும் என்பது பட்டியலிடப்படவேண்டும்.
இன மத பேதம் கடந்ததாக சமூகம் -தனிமனிதர்கள்- குழுக்கள் -அரசு யந்திரம் தொடர்பு பட்டு இந்த மறு சீரமைப்பு இயக்கம் நிகழவேண்டும்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் நிகழ்ந்தவை தொடர்பாக இந்நாள்வரை நினைவூட்டலுக்கு உட்படுத்தப்படுவது போன்று இது தொடர் நிகழ்வாக இருக்கவேண்டும்

இனிமேலும் இவை நிகழாமல் இருப்பதற்கு இவை மிக மிக அவசியம்.

நிலப்பிரபுத்துவ பாணியிலான இந்த நாட்டின் இன சமூகங்களின் தலைமைகள் தலைவர்களின் அரசியல் மற்றும் நடத்தைகள், ஒழுக்கம் ,பண்பாடு பற்றிய மதிப்பீடுகள் இவை எல்லாமே சமூகப் பேரழிவிற்கு பங்களித்திருக்கின்றன.

ஆடம்பரமற்ற எளிமையான மனிதரை மனிதர் மதிக்கும் ஜனநாயகம் தேவைப்படுகிறது.

தீண்டாமை ,பெண்ணடிமைத்தனம் ,சிறுவர் துஸ்பிரயோகம் , அதிகாரவர்க்க அகங்காரக் குணாம்சங்களில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன

இவை சமூகத்தின் சகல மட்டங்களையும் பாதிக்கின்றன. பழுதடையவைக்கின்றன.

வைத்தியசாலையில்- பொதுப் போக்குவரத்தில்- பொலிஸ்நிலையங்களில்- கச்சேரி- கிராம சேவகர் அலுவலகங்களில் -அமைச்சு காரியாலயங்களில் மக்களுடன் எவ்வாறு உரையாடுவது அணுகுவது என்று கற்றுத்தரப்படவேண்டியிருக்கிறது.
இது ஒரு நீணட நெடும் பயணம்

சுகு-ஸ்ரீதரன்