கனடாவில் நடைபெற்ற மே தினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து தொழிலாளர் உரிமை தினமான மே தின நிகழ்வை நடாத்துவது வழக்கம். இம் முறையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் இணைந்து சிந்தனை செயற்பாட்டு மையம் என்ற ஐக்கிய அமைப்பின் கீழ் மே தின நிகழ்வை நடாத்தினர். இதில் பழம் பெரும் தமிழ் இடதுசாரிகள். தொழிற் சங்கவாதிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈபிடிபி, சம உரிமை இயக்கம். ரேலோ, புளொட் அமைப்பினர் கனடா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பலவேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமது கருத்துரைகளை வழங்கினர். தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (SDPT) இன் முக்கியஸ்தர் தோழர் ஜேம்ஸ் தனது கருத்துரையில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நாள் ஒன்றிற்கு 8 மணி நேர வேலை என்று போராடிப் பெற்ற உரிமை இன்று நவீன முதலாளித்துவத்தின் பல் தேசியக் கம்பனிகளினாலும் முதலாளித்துவ நாடுகளினாலும் பறிக்கப்பட்டுள்ளன. இதனை விளைவு தற்போது தினமும் 14 மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் எல்லா நாட்களும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் மீண்டும் தினம் ஒன்றிற்கு 8 மணி வேலை என்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தனது உரையில் தெரிவித்தார். மேலும் சமூக மாற்றத்தின் ஊடாகவே அன்று பெற்ற வெற்றியைநாம் தொடரந்தும் நிலை நிறுத்தியிருக்க முடியும். எனவே உலகத் தொழிலாளர்கள் சமூகமாற்த்திற்கான போராட்டதை இடைவிடாது முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று மேலும் கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரான மக்களின் வாழ்க்கை முறையில் தமது உற்பத்திப் பொருட்களை கிராமத்து சந்தைகளிலும் ஏனைய வழி முறைகள் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல்களை தவிர்த்த முறை தற்போது மெதுமெதுவாக இல்லாமல் வருவதாகவும,; கடற் தொழிலாளர்களின் மீன்களும் கிராமங்களில் தோட்டங்களில், வீடுகளில் விளையும் பொருட்கள் கூட இடைத் தரகர்களால் தரகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஒரு அபாயகரமான நிலைமை என்றும். இதனால் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும் நுகர்வோரும் அதிகம் பாதிப்படைவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தும் கிராமத்து சந்தை முறை மீண்டும் உருவாக்கப்பட்டு நியாய விலையில் உற்பத்தியாளரும் நுகர்வோரும் பயன்பெறும் முறைகள் மீள் உருவாக்கப்படவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஓய்வு பெறும் வயது 55 வயதாகவே தொடர்ந்தும் பேணுதல் வேண்டும் இதன் மூலம் இளைஞர்கள் தொழில் வாய்பில் இளம் வயதில் ஈடுபடவும் அதே வேளை ஓய்வு பெற்றவர்கள் தமது ஓய்வுக்காலத்தை அர்த்தமுள்ள சமூக செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தவும் முடியும் என்று கருத்து தெரிவித்தார். தமிழ் சூழலில் வேலையிடங்களில் சகல தொழிலாளர்களுக்கும் கனடிய தொழலாளர் நலச் சட்டதிட்டங்களுக்கு அமைவான ஊதியமும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
(சூத்திரம் கனடா நிருபர்)