ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்

பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கடந்தாண்டில் அகதிக் கோரிக்கையை விடுத்த 476,649 பேரில் 31,902 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் 8,47 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனவும் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் ஆர்வமிகுந்த இந்த நாடுகளைச் சேர்ந்தோரால், ஜேர்மனியிலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனி கிரிக்கெட் சம்மேளனத்தின் இணையத்தளத்தினூடாக ‘நான் எங்கே விளையாட முடியும்?” என்ற கேள்வியே, அதிகமாகக் கேட்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

2012ஆம் ஆண்டில் 70 அணிகளில் 1,500 கிரிக்கெட் வீரர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 205 அணிகளில், பதிவுசெய்யப்பட்ட 4,000 கிரிக்கெட் வீரர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், எதிர்காலத்தில், பலமான அணிகளுள் ஒன்றாக ஜேர்மனி மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.