கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பொருளாளரான நற்பிட்டிமுனையை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் – வயது 67 மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்முனை பொலிஸார் நீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோருவதாகவும் இச்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஹாஜியார் இரு வாரங்களுக்கு முன்னர் இரவு நேரம் நற்பிட்டிமுனையில் ராஜ்சினிமா வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து வழி மறித்த இரு நபர்களால் தாக்கப்பட்டார். தலைக் கவசங்களால் மாறி மாறி நைய புடைத்தனர். கால்வாய்க்கு அருகில் இவர் மூர்ச்சித்து விழுந்த நிலையில் இறந்து விட்டார் என்று நினைத்து விட்டு சென்றனர். பின்னர் தகவல் அறிந்த குடும்பத்தினர் இவரை மீட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்த உதுமாலெப்பை தௌபீக் என்பவரும், தௌபீக்கின் உறவினரான உமர்லெப்பை ஹமீத் என்பவருமே தாக்குதல் நடத்தி இருந்தனர் என்று தெரிவித்து இருந்தார். ஆயினும் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், பொலிஸார் அநீதியாக நடக்கின்றனர் என்பதை உணர முடிகின்றது என்றும் ஊடகவியலாளர்களுக்கு இப்றாலெப்பை ஹாஜியார் தெரிவித்து உள்ளார்.

இந்நிலைமையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களுக்கான கூட்டம் சங்க தலைவர் லோகநாதன் தலைமையில் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றபோது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான சம்பள மீளாய்வு குழுவுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

* வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு திட்டம் தொழிற்சங்கங்களின் ஆலோசனை, பங்களிப்பு ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டு இராத நிலையில் பல குறைபாடுகளையும் கொண்டு இருப்பதால் மீளாய்வு செய்யப்பட்டு தொழிற்சங்கங்களின் ஆலோசனை, பங்களிப்பு ஆகியவற்றுடன் திருத்தப்பட வேண்டும். அத்துடன் தற்போதைய ஆட்சேர்ப்பு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக பதவி உயர்வுகளில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

* அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை வட மாகாண சபையை போலவே கிழக்கு மாகாண சபையும் நிராகரித்தல் வேண்டும்.