ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா

இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (08) பிற்பகல், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. சிங்களம், தமிழ், ஆங்கில இலக்கியத்தின் மேம்பாட்டுக்காகச் செய்த சேவையை கௌரவித்து வழங்கப்படும் சாகித்திய ரத்ன விருது, பேராசிரியர் ஆரிய ராஜகருணா, நீர்வை பொன்னையன், ஜீன் அரசநாயகம் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு இலங்கை இலக்கியத் துறைக்கு தனித்துவமான படைப்புகளை வழங்கியமையை கௌரவித்து பல எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அரச சாகித்திய விருது விழாவுடன் இணைந்ததாக வெளியிடப்பட்ட விசேட சாகித்திய நினைவு மலர் மற்றும் 2017ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது பெற்ற இலக்கிய நூல்கள் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அநுஷா கோகுல பெர்னாந்துவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பீ நாவின்ன, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டீ. சுவர்ணபால ஆகியோர் கலந்துகொண்டனர்.