கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

ரி. தர்மேந்திரன் –

கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவர். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல, ஒரு நாடு இரு தேசம் போல வஃபா பாருக் கிழக்கு தேசம் என்கிற சிந்தனை கருவை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக முன்னெடுத்து வருகின்றார். முஸ்லிம்களின் சம கால அரசியல் குறித்து நாம் இவரை பேட்டி கண்டபோது….

கேள்வி:- சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- கல்முனை மக்களின் அச்சத்தை தீர்க்க கூடிய விதத்திலும், சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற கூடிய வகையிலும் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். அரசியல் தலைமைகள் அனைத்தும் சந்தர்ப்பவாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்றன. இந்நிலையில் சத்தியமும், சாத்தியமும் அற்ற வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை சந்தர்ப்பவாத அரசியலுக்கு உட்படுத்தி, வாக்குகளை சேகரித்து, அதிகாரங்களை அமைத்து கொள்வதை மட்டுமே நோக்கமாக கொண்ட அரசியல் தலைமைகளை தூக்கி எறிய மக்கள் துணிந்து விட்டனர் என்பதையே சாய்ந்தமருது மக்களால் முடுக்கி விடப்பட்டு உள்ள போராட்டங்கள் வெளிப்படுத்தி காட்டுகின்றன என்பது அவதானத்துக்கு உரிய முக்கியமான ஒரு விடயம் ஆகும். கல்முனை பட்டின சபையுடன் ஏனைய 04 சபைகளை இணைப்பதாக 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தை சட்ட வலு அற்றதும், செல்லுபடி அற்றது என்றும் அறிவித்து, இரத்து செய்வதன் மூலம் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை மிக இலகுவாக வழங்க கூடிய முறை இருக்க தக்கதாக கட்சி சார்ந்த குறுகிய அரசியல் இலாபங்களை கருத்தில் அரசியல் தலைமைகள் இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கேள்வி:- கிழக்கு தேசம் என்கிற எண்ண கரு மூலமாக என்ன சொல்ல விழைகின்றீர்கள்?

பதில்:- கிழக்கு மக்களின் சுய நிர்ணய ஆட்புலத்தின் குறியீட்டு பெயர்தான் கிழக்கு தேசம் என்பதாகும். கிழக்கு மாகாணம் வளங்களையும், வாய்ப்புகளையும் கொண்ட தனியான தேசம் என்று இது பிரகடனப்படுத்துகின்றது. கிழக்கு மக்களின் சுய நிர்ண உரிமை உதாசீனப்படுத்தப்பட்டு, வடக்கோடு கிழக்கு இணைக்கப்படுவதில் கிழக்கு தேசம் முரண்படுகிறது. ஆனால் இது ஒரு பிரிவினை கோஷமாக மாறுவதும், மாறாமல் இருப்பதும் இரண்டு பெரும்பான்மை சமூகங்களினதும் அரசியல் தலைமைத்துவத்தின் கைகளில்தான் உள்ளது.

கேள்வி:- அரசியல் அமைப்பை திருத்த மேற்கொள்ளப்படுகின்ற முன்னெடுப்புகள் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- அரசியல் அமைப்பு திருத்தத்தில் வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும்கூட இது சிறுபான்மை மக்களுக்கான அதிகார பகிர்வை இலக்காக கொண்ட ஒரு முனைப்பே ஆகும். இதில் மறைமுகமாகவேனும் முஸ்லிம்களின் நலனையும், இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த கூடிய ஒரு அதிகார அலகு உள்ளடக்கப்படாமல் விட்டு, வெறுமனே வடக்குடன் கிழக்கை இணைப்பது தமிழீழ கோஷம் ஏற்படுத்திய வடுக்களை போல புதிய வடுக்களை கிழக்கு தேச கோஷம் ஏற்படுத்த காரணமாகி விடலாம். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு புதிய அரசியல் அமைப்புக்கு உள்ளது. ஆகவே சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் கிழக்கு மக்களின் சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்த கூடிய வகையிலான உத்தரவாதங்களை கொண்ட ஏற்பாடுகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கி கொள்ள வேண்டும்.

கேள்வி:- கரையோர மாவட்ட கோரிக்கை முஸ்லிம்களுக்கான தீர்வு யோசனையாக இருக்க மாட்டாதா?

பதில்:- தமிழ் மக்கள் அவர்களுடைய போராட்டத்தை தனிநாடு என்கிற உச்சபட்ச கோரிக்கையை முன்வைத்து முன்னெடுத்ததன் விளைவாகவே குறைந்த பட்சமாக சமஷ்டிக்கு சமமான ஒரு தீர்வை பெற்று கொள்ள கூடிய வாய்ப்பை இன்று பெற்று உள்ளனர். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கரையோர மாவட்டத்தை தீர்வாக கேட்கின்ற கேலி கூத்தை செய்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை கச்சேரிக்கு மேலதிகமாக மொழி ரீதியான நிர்வாக அலகு ஒன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையே கரையோர மாவட்ட கோரிக்கை முன்வைக்கின்றதே ஒழிய அது முஸ்லிம்களுக்கான தீர்வாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆகவே கரையோர மாவட்ட கோரிக்கை முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வாக பார்க்கப்படுவது பிழை ஆகும். முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பது வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம்களினதும் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கின்ற பொறிமுறைகளையும், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த கூடிய வழிமுறைகளையும் அடையாளப்படுத்த கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு, நிதி, நிலம் போன்றவற்றின் மீதான பூரண அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட, சிற்றலகுகளின் பேரலகு ஒன்றை பெற்று கொள்வதற்கான முன்மொழிவையே கிழக்கு தேசம் பரிந்துரைக்கின்றது.

கேள்வி:- நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது மாத்திரமே அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றீர்கள். ஏனைய தலைவர்களை ஒருபோதும் தாக்குவது இல்லை. ஏன்?

பதில்:- முஸ்லிம்களின் மக்கள்மயப்படுத்தப்பட்ட விடுதலை அமைப்பாக முஸ்லிம் காங்கிரஸை மாத்திரமே நான் காண்கின்றேன். தவிரவும் இதன் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் நேரடியாக ஏராளமான பங்களிப்புகளை வழங்கி இருக்கின்றேன். அப்படிப்பட்ட சமூக விடுதலைக்கான அமைப்பை விலை போட்டு, அதிகாரங்களுக்காக விற்று, சிதைத்து கொண்டிருக்கின்ற காரியத்தை ரவூப் ஹக்கீம் செய்து கொண்டு இருப்பதால்தான் எனது கண்டனங்கள் அனைத்தும் அவர் மீது குவிந்து உள்ளன. இது நியாயமானதுதான். மற்றைய கட்சிகளை சமூக விடுதலைக்கானவையாக நான் நோக்கவில்லை. அதனால் அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கேள்வி:- கிழக்கு தேசம் வருகின்ற தேர்தல்களில் போட்டியிடுமா?

பதில்:- கிழக்கு தேச கோட்பாட்டை புரிந்து உள்வாங்கி உள்ள சிந்தனையாளர்களை எங்கள் சார்பாக தேர்தல் களங்களில் இறக்கி மக்களின் அங்கீகாரங்களை பெற்று கொள்கின்ற முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.