தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா அடுத்ததாக வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கட்சியின் மகளிர் அணி தலைவியும், வட மாகாண பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் கோரி உள்ளார். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை பிரகடன மாநாட்டை நடத்தி 05 தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் வட மாகாணத்தில் இருந்து வந்து ஜான்சிராணி சலீம் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அதாவுல்லாவின் தெளிந்த சிந்தனை, தீர்க்கதரிசனம், தூர நோக்கு ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட பாலமுனை பிரகடன மாநாடு முஸ்லிம்களின் அரசியலில் மாத்திரம் அல்ல தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஆகும். முஸ்லிம்களின் பேரெழுச்சியை இம்மாநாடு சிங்கள பேரினவாத தலைவர்களுக்கும், சுய நல முஸ்லிம் தலைமைகளுக்கும் வெளிப்படுத்தி காட்டி உள்ளது. பெருந்தலைவர் அஷ்ரப்பின் காலத்துக்கு பிற்பாடு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீண்டும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என்கிற செய்தியையும் இம்மாநாடு அவர்களுக்கு சொல்லி உள்ளது. கிழக்கு மண்ணில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டில் வடக்கில் இருந்து வந்து பங்கேற்றது குறித்து பெருமையும், பெருமிதமும் அடைகின்றோம்.

தேசிய காங்கிரஸால் கிழக்கு மாகாணத்தில் பாலமுனை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு உள்ளதை போலவே வடக்கு மாகாணத்தில் வன்னி பிரகடனம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் வன்னியில் பல தசாப்த காலமாக தொடர்ந்து அகதிகளாக வாழ்கின்ற நிலையில், இவர்களின் தலைவர்கள் என்று புறப்பட்டவர்கள் இவர்களின் அவல வாழ்க்கையை முதலீட்டாக்கி அமைச்சு பதவி போன்றவற்றை காலம் காலமாக அனுபவிப்பதோடு இவர்களை அடிமைகளாக நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் எமது தலைவர் அதாவுல்லாவை வன்னி முஸ்லிம் மக்களில் பலர் நேரில் சந்த்து கவலைகளை வெளியிட்டதுடன் இவரின் மகத்தான சேவைகளை வடக்குக்கு குறிப்பாக வன்னிக்கு விஸ்தரிக்க வேண்டும் என்று கோரி கொண்டனர். இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகளை இதயபூர்வமாக உணர்ந்த நிலையிலேயே தலைவர் அதாவுல்லா தேசிய காங்கிரஸை வடக்குக்கு குறிப்பாக வன்னிக்கு விஸ்தரித்ததுடன் வட மாகாண அமைப்பாளராக வன்னியை சேர்ந்த என்னை நியமித்தார். அத்துடன் இரு தடவைகள் வன்னிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு வந்து நிலைமைகளை பார்வையிட்டார். இந்நிலையில் வன்னி பிரகடனத்தை தேசிய காங்கிரஸ் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் மாத்திரம் அல்ல வன்னி முஸ்லிம்கள் அனைவரினதும் அபிலாஷையும் ஆகும்.