கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியில் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை 2 வருட கால அவகாசம் கோரியுள்ளது. எனவே இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. எனினும் குறித்த தீர்மானத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம். இத்தீர்மானத்தை, எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, ஈ.பி.ஆர்.எல்.எப் விலகுமா, என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு, கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பில், கட்சியில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் பதிலளித்தார்.