‘சிங்க லே’ உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தம்!

சிங்க லே என்று கூச்சலிடுபவர்களின் உடம்பில் ஒடுவது கலப்பு இரத்தம் என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபையின் புதிய ஆளுனராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான வரவேற்புநிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலப்பு இரத்தம் கொண்டவர்கள் என்று கூறினார். சிங்க லே என்று கூறுவோரின் உடம்பில் கலப்பு இரத்தம் ஓடுவதாகவும் யாரும் ஒரு இன, ஜாதி, நாட்டு இரத்தத்துடன் இருப்பதில்லை என்றும் கூறினார். இந்தியாவிலிருந்து அரசி கொண்டு வருகின்றோம், தாய்வானிலிருந்து கருவாடு கொண்டு வருகின்றோம். அப்படி பார்த்தால் எமது உடம்பில் ஓடுவது சர்வதேச கலப்பு இரத்தமாகும் என்றும் கூறினார். ரெஜினால்ட் குரே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராகவும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.