அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில், மலையக மக்களுக்கான தனியான அலகும், தனி அடையாளமும் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது. இந்த அமர்வின் போதே மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் சுமார் 45 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அரசியல் தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை பெருந்தோட்ட துறையை சார்ந்த ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.

இதில் முக்கியமாக மலையக ஆய்வகம், இலங்கை தொழிலாளர் முன்னணி, ஜனநாயகத்துக்கான சமாதான வழக்கறிஞர் அமைப்பு, சிங்கள தமிழ் கிராமிய வலையமைப்பு, இளம் சமூக விஞ்ஞானிகள் அமைப்பு, சர்வமத மகளிர் அமைப்பு, அதிர்வுகள் பெண்கள் அமைப்பு மற்றும் பல குழுக்கள் தமது யோசனைகளை வருகை தந்திருந்த உத்தேச அரசியல் சீர்திருத்த பொது மக்கள் கருத்தினை கேட்டறியும் நால்வர் அடங்கிய குழுவினரிடம் கையளித்தனர். மலையகத்திற்கு தனியான அலகு மலையக மக்களுக்கு தனி அடையாளம். காணி உரிமை மதம் மற்றும் மொழிகளுக்கான உரிமை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென கூறப்பட்டது.

ஜனாதிபதி உப ஜனாதிபதிகள், ஆளுனர், உப ஆளுனர்கள் இன விகிதாசார ரீதியாக நியமிக்கப்பட வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் 50% வீதம் உயர்த்தப்பட வேண்டும். சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டு காணி உறுதி வழங்கப்பட வேண்டும். தோட்டப்புறங்கள் கிராமங்களாக மாற்றப்பட்டு உள்ளுராட்சி அமைப்புகளின் சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். கிராம சேவகர் பிரிவு மற்றும் பிரதேச சபைகள் அதிகரிக்க வேண்டும் என யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அத்தோடு இடம்பெற்ற இந்த இரண்டு நாள் அமர்வுகளில் மொத்தமாக 75 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கருத்துக்களும், யோசனைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.