“சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!

சின்ன மாமியே பாடலுக்குச் சொந்தக் காரரான கமலநாதன் மாஸ்டர் காலமான செய்தியை அறிந்தேன். அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். ஒரு காலத்தில் இன்னாரின் பிள்ளை இவர் என்று சொல்லப்படும் பிள்ளை பிரபலமானதும் அப் பிள்ளையின் தாய் தான் இவர், தந்தை தான் இவர் என்று மாறுவது இன்றைய உலக வழமை. ஊடகத்துறையில் ஒலிபரப்புத்துறையில் என்னுடன் பணியாற்றிய இளம் ஒலிபரப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் நான் கண்ட சமூக அனுபவம் இது. எமக்குத் தெரிந்த விளையாட்டுத்துறையில் பிரபலமான கமலநாதன் மாஸ்டரை பொப் பாடல் சின்ன மாமியே புகழ் கமலநாதன் மாஸ்டர் என்று சொல்லவேண்டிய நிலைக்கு ஊடக ஜனரஞ்சகம் நம்மை மாற்றியுள்ளது. அவர் பிறந்த வதிரிக் கிராமத்திற்கு அயல் கிராமமான கரவெட்டியில் பிறந்து வளர்ந்து அக் கிராமத்துடனும் இணைந்து வாழ்ந்தவன் என்ற வகையில் அவருடைய பிரிவில் சில குறிப்புக்களை இங்கு பகிர விரும்புகிறேன்.

வதிரிக்கும் கலைக்குமுள்ள தொடர்பை எழுதிக்கொண்டே செல்லலாம். பாரம்பரிய நாட்டார் கலை முதல் மேடை நாடகம் சாஸ்திரிய இசை சிறுவர் இலக்கியம் நடனம் என்று பொப் இசை வரையாக மட்டுமன்றி . கையெழு த்துப் பத்திரிகை முதல் சஞ்சிகை இலக்கியம் ,சிறுகதை,நாவல் என்றுமட்டுமல்ல இன்று குறும்படங்கள் வரைக்கும் அதன் வகிபாகம் முக்கியமானதாய் நிற்கிறது..

கல்வித்துறையில் அது இன்று சாதனை மிக்க ஒன்றாகத் திகழ்கிறது. ஏதோ ஒரு ஆளுமை நிறைந்த பெயரால் தான் என்னவோ ஒல்லாந்தர் தம்முடைய நிருவாக அலகாக வதிரி என்ற பெயரை வடமராட்சியில் நிர்மாணித்திருந்தனர். என்னுடைய வீடும் வதிரி தெற்கிற்குச் சொந்தமானது .நான் படித்த பாடசாலை வதிரி திரு இருதயக் கல்லூரி.

சின்ன மாமியே என்ற எளிய மொழியிலான மக்கள் ரசனை இலக்கியத்தையும் தந்தது வதிரி . பொப் இசைப் பாடல்களில் மிக்க எளிமை நிறைந்த பாடல் அது. 1980 களில் வதிரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பொப் இசைக் கலைஞர்கள் பெரும்பாலனவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது பொப் இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. எம் எஸ் பெர்னாண்டோ ,மேடையில் “கன்னியவள் இடையினிலே தண்ணிக் குடத்தை” இரண்டு தடவை ” தமது தமிழில் சுமந்து” வந்தார். ஒன்று ” கள் ” இல்லாமல் ..மற்றது பின்னிரவில் “கள் ” உடன்…இரண்டும் இரசிகர்களைக் கவர்ந்தன. ஏ ஈ மனோகரன் ,நித்தி கனகரத்தினம், ஸ்ரனி சிவானந்தன் என முழு “பாண்ட் “வாத்தியக் குழுவினரும் வந்திருந்தனர்.

இலங்கையில் ரூபவாஹினி ஆரம்பமாகிய நாட்களில் “நந்தன விந்தன” என்ற சிங்கள நிகழ்ச்சி பிரபலமானது. வதிரியில் பிரதான வீதியில் தேவமகால் – எனது நண்பரின் வீடு – அங்கு நாம் கூடி நந்தன விந்தன பாணியில் சருகைகள் ,மினுங்கல்கள் கொண்டு அலங்கரிப்போம். மேடைமட்டுமல்ல -பாடுபவர்களின் முகங்களும் உடைகளும் கூட…!. அதுமட்டுமன்றி, சுஜாதா அத்தநாயக்க ,முத்தழகு பாக்கியராஜா பாணியில் பாட்டு பைலா என்பன இடம்பெறும். கமலநாதன் அவர்களை இவர்தான் பொப் பாடல்கள் எழுதுபவர் என்று முன்பு சொல்வார்கள். எளிமையானவர். அவர் விளையாட்டில் பிரபலமான ஆசிரியர் நடுவர் ஆனால் நூலகத்திற்கு வரும்போது சாதாரண வாசகர் போல அமைதியாக இருப்பார்.

எனக்கு உள்ளூர் செய்திகளைத் தருபவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர். வடமராட்சியில் மட்டுமல்லாமல் யாழ் குடாநாட்டில் நிகழும் செய்திகளையும் தருவார். எளிய மொழி நடையில் திருத்தம் இல்லாமல் பத்திரிகைப் பாணியில் அப்படியே பிரதி செய்து நாம் எழுதக் கூடிய வகையில் எழுதித் தருவார். ஆங்கிலப் பத்திரிகையான ஐலண்ட் பத்திரிகைக்கும் அதன் நிருபராகப் பணியாற்றிய மகாலிங்கம் மாஸ்டருக்கு விளையாட்டுச் செய்தி விபரங்களை எழுதிக் கொடுப்பார். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பின்புலமே அவரது விளையாட்டுத் திறமைக்கும் ஆங்கில மொழி ஆற்றலுக்கும் அவரின் ஏனைய படைப்புக்களான சில பைலாப் பாடகளுக்கும் அடித்தளமாக இருந்திருக்கலாம். “சின்ன மாமியே” பாடலை நான் தான் எழுதினேன் என்று அவர் ஒரு போதும் தம்பட்டம் அடித்ததில்லை.

ஒரேயொரு ஒரு குறும்படத்தை இயக்கிவிட்டு பெரிதாகவே “குறும்பு” பண்ணும் இன்றைய இளையவர்களுக்கு கமலநாதன் போனறவர்கள் முன்னுதாரணங்கள் ஆவர். இலக்கியச் செய்திகளை வதிரி வைத்தியர் மாசிலாமணி அவர்களும் தெணியான் அவர்களும் இவரது மைத்துனர் சதானந்தம் அவர்களும் எழுதித்தருவார்கள். பொதுவாக வடமராட்சியில் இடம்பெறும் விளையாட்டுச் செய்திகளை கமலநாதன் அவர்களே எழுதித்தருவதுண்டு. உதைபந்தாட்டம், கிரிக்கற், கரப்பந்தாட்டம் எதுவாயினும் அவற்றிற்குரிய மொழி நடையில் எழுதி என் வீட்டிற்கே கொண்டுவது தருவார். சின்னமாமியே பாடலை எங்கள் ஊரில் பாடசாலை தேவாலய வைபவங்களில் பாடுவது ஒரு வழக்கமாக இருந்தது. அக்காலத்தில் “அடுத்ததாக சின்னமாமியே பாடல் இடம்பெறும்” என்று அறிவிக்க ரசிகர் கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்கும்.

பொப் இசைப் பாடலான சின்ன மாமியே அடுத்து இடம்பெறும் என்று அறிவித்ததில்லை. பொப் இசை என்ற தரத்தை அது பெற்றது நித்தி கனகரத்தினம் பாடி பொப் இசையாக ஒலி நாடாவில் வந்த பின்னராகும். இப் பாடலை நான் முதன் முதல் எங்கள் அயலிலுள்ள கட்டைவேலி தேவாலயத்தில் முதன் முதல் மேடையில் நித்தி கிற்ராருடன் பாடியதைக் கண்ட ஞாபகம். அது ஒரு நத்தார் தினமாக இருக்க வேண்டும். அப்போது அது பிரபலமாகவில்லை. பொப் இசை – புகழ் பெறத் தொடங்க அதுவும் அதனுடன் சேர்ந்து புகழ் பெற்றது. பிற் காலத்தில் ஏ ஈ மனோகரன் அவர்கள் “பட்டு மாமியே உன் சிட்டு மகள் எங்கே ” என்று சில மாற்றங்களுடன் பாடினார்.இடையில் சின்ன மாமி பாடலின் வரிகளும் வந்தன. ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் சின்ன மாமியே பாடல் போனால் எழுத்தோட்டத்தில் ஏ ஈ மனோகரனின் பெயர் தான் வருவது வழக்கமாக இருந்தது.

இதனை ஒரு முறை நித்தி கனகரத்தினம் அவர்கள் புலம்பெயர் தொலைகாட்சியொன்றில் குறிப்பிட்டு கவலையும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று தமிழ் மொழி பற்றிய பல ஆராய்ச்சிகளைச் செய்யும் நித்தி கனகரத்தினம் அவர்கள் தமக்குப் புகழ் தேடித்தந்த பாடலை எழுதியவர் கமலநாதன் என்று ஒருவர் – எனச் சொல்லவுமில்லை. பேட்டி நடத்தியவரும் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. இதனை விட சின்னமாமியே பாடலை எழுதியவர் கொழும்பில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் என்ற கதையும் நான் ரூபவாஹினியில் இணைந்த்ருந்த காலத்தில் சிலர் பேசக் கேள்விபட்டுள்ளேன்.
தொழிலுக்குப் புதியவன் என்பதாலும் சம்பந்தப்பட்டவர் அத்துறையில் கொழும்பில் பிரபலமானவர் என்பதாலும் அவர் எனக்கு நண்பரானதுடன் நல்ல ஆலோசகராக விளங்கியதாலும் நான் இப் பாடல் பற்றி எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு விளையாட்டு ஆசிரியர் தான் இதனை எழுதினார் என்று சொல்லி வீண் வம்பை மாட்டிக் கொள்ள விரும்பாததும் காரணமாக இருக்கலாம். நான் தொலைகாட்சித் துறையில் இணைந்த ஆரம்ப காலத்தில் ஏற்கனவே புகழ் பெற்ற வானொலித் தொடர் நாடகம் ஒன்றின் கதை தொடர்பாக -அதனை கரவெட்டியைச் சேர்ந்த இலக் கிய அறிஞர் கரவைக் கிழார் எழுதிய சர்ச்சை பற்றி அவரின் அயலவரான அமரர் கே எஸ் பாலச்சந்திரனிடம் நான் கேட்டபொழுது

நாம் இதனைப் பற்றிக் கதைக்கக் கூடாது ; இந்த துறையில் வேலை செய்ய வந்தால் இவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளக் கூடாது .இவர்கள் எல்லாம் இத்துறையில் பலம் வாய்ந்தவர்கள் அனுபவம் மிக்கவர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் இவர்களுடன் பகைக்கக் கூடாது ..என்று மட்டும் எனக்கு ஆலோசனை வழங்கினார். நானும் அதனைப்பற்றிப் பின்னர் பேச்சு எடுக்கவில்லை. சின்னமாமியே பாடலை எழுதியவர் யார் என்பதும் இப்படித்தான் ஊடக ஜனரஞ்சகச் செல்வாக்கின் பலன்களுக்குள் மறைந்து நின்றது. எனினும், புகழ் மிக்கவர்கள் என்றும் புகழுக்குரியவர்களே என்றொரு கொலம்பியப் பழமொழி இருப்பதாக அண்மையில் அறிந்தேன். கலைத் திறமைகளுக்கும் திறமை மிக்க “அசல்” கலைஞர்களுக்கும் இது என்றும் பொருந்தும். அதனை என்றும் எவராலும் எப்போதும் அழிக்கமுடியாது!
அமரர் கமலநாதனின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்! புதிய உலகின் புகழின் சங்கமத்தில் அவர் நிம்மதியாய் உறங்குவாராக!

( எஸ் எம் வரதராஜன் – நியூசீலாந்து )