சிரியாவில் குர்திஷ்கள் சமஷ்டி பிரகடனம்

வடக்கு சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதியில் சமஷ்டி அரசொன்றை பிரகடனம் செய்ய குர்திஷ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையிலேயே குர்திஷ் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிரியாவின் துருக்கி எல்லையை ஒட்டிய அலப்போ மாகாணத்தின் அப்ரின் மற்றும் கொபானி, ஹஸகாவில் ஜெஸீரா பகுதிகளில் குர்திஷ்கள் ஒரு சுயாட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.

எனினும் குர்திஷ்கள் அறிவித்திருக்கும் சுயாட்சி பகுதிகளில் ஐ.எஸ்ஸின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட அரபு மற்றும் துர்க்மான்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த திட்டத்தை ஜெனீவா பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் அரச தரப்பினர் நிராகரித்திருப்பதோடு துருக்கியும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பும் அழுத்தம் கொடுத்துள்ளன.

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் சிரிய மக்கள் தொகையில் 7 முதல் 10 வீத குர்திஷ்கள் இருந்தனர்.

எனினும் பல தசாப்த கால அரபு ஆட்சிகளில் குர்திஷ்கள் பாகுபாட்டுக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம்கொடுத்து வந்தனர். நாடெங்கும் அஸாத் எதிர்ப்பு போராட்டம் வெடித்தபோது பெரும்பாலான குர்திஷ்கள் அதனை தவிர்க்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

கடந்த 2012 இல் அரபு சுன்னி கிளர்ச்சியாளர்களுடனான யுத்தத்தில் கவனம் செலுத்த சிரிய அரச படை குர்திஷ் பகுதிகளில் இருந்து வெளியேறியதை அடுத்தே அங்கு குர்திஷ் ஆயுததாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் மக்கள் ஆதரவு பாதுகாப்பு பிரிவு (வை.பீ.ஜீ.) மற்றும் ஜனநாயக ஒன்றிய கட்சி (பீ.வை.டி.) ஆகிய குர்திஷ் போராட்டக் குழுக்கள் குர்திஷ் பகுதிகளை கைப்பற்றின.

இந்நிலையில் பீ.வை.டி. அப்ரின், கொபானி மற்றும் ஜஸீரா பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 2014 ஜனவரியில் சுயாட்சி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தியது.

தாம் தனி நாடொன்றை கோரப்போவதில்லை என்றும் சமஷ்டி கட்டமைப்புக்குள் ‘உள்ளூர் ஜனநாயக நிர்வாகம்’ ஒன்றையே கோருவதாகவும் குர்திஷ்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் 2014 செப்டெம்பரில் ஐ.எஸ். குழு கொபானி நகரை கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் துருக்கியில் அடைக்கலம் பெற்றனர். அமெரிக்காவின் வான் தாக்குதலின் உதவியோடு நான்கு மாத யுத்தத்தின் பின்னர் அந்த நகரை வை.பீ.ஜீ. மீட்டது.

அது தொடக்கம் வை.பீ.ஜீ. போராளிகள் ஐ.எஸ்ஸை தொடர்ந்து வீழ்த்தி அதன் கட்டுப்பாட்டில் இருந்த 26,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பகுதிகளை கைப்பற்றியதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. இதில் துருக்கி எல்லையை பகிர்ந்து கொள்ளும் 400 கிலோமீற்றர் பகுதியும் அடங்கும்.

ரிமைலான் நகரில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான சுமார் 200 குர்திஷ் பிரதிநிகள் பங்கேற்ற மாநாட்டை ஒட்டியே ஐ.எஸ்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சமஷ்டி ஆட்சி முறைக்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குர்திஷ்கள் மற்றும் ஏனைய அனைத்து இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலான பரந்த சுய நிர்வாக அமைப்புக் கொண்ட சமஷ்டி முறையொன்று ஏற்படுத்தப்படும் என்று குர்திஷ் அதிகாரி இத்ரிஸ் நஸ்ஸான் ராய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமஷ்டி பிரகடனம் கடந்த புதன்கிழமை அறிவிக்கப்படவிருந்தபோதும் உள்ளூர் அரபு மற்றும் ஆசிரியன் சமூகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பிற்போடப்பட்டிருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குர்திஷ் திட்டம் பற்றி ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் அரச தரப்பு தலைமை பேச்சுவார்த்தையாளரிடம் கேட்டபோது, “இங்கிருந்தும் அங்கிருந்தும் வருகின்ற எழுத்துமூலமற்ற அறிவிப்புகளுக்கு பதில்கூற முடியாது” என்றார். எனினும், “சிரியாவில் உருவாக்கப்படும் எந்தவொரு பிரிவினையும் தோல்வியிலேயே முடியும்” என்று எச்சரித்தார்.

சிரிய அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, பீ.வை.டி. அமைப்பு நாட்டில் பிரிவினை கோரி போராடும் பீ.கே.கே. குர்திஷ் ஆயுதக் குழுவின் கிளையாக செயற்படுவதாக கருதுகிறது.

“சிரியாவின் தேசிய ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு எமக்கு அடிப்படையானதாகும். இதற்கு அப்பாலான தீர்மானங்கள் ஏற்க முடியாதவை” என்று துருக்கி வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா அமைதி பேச்சுவார்த்தையில் குர்திஷ் தரப்பினர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.