தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவிப்பு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி என்கிற சிவகாமியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தமிழினியின் ‘ஓர் போர்வாளின் நிழலில்’ நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர், தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து புலிகளை மீளவும் இயங்கச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் சர்வதேச ரீதியாக இயங்கச் செய்ய எவ்வித சாத்தியமும் கிடையாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.