தனியாக சிறை செல்ல மாட்டேன் விக்னேஸ்வரனையும் அழைத்துச் செல்வேன் – ஞானசார தேரர்

நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (28) தெரிவித்தார். மேலும், “இம்முறை ​சிறைக்குச் செல்லும்போது, விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே செல்வேன்” எனவும் தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். எனக்குத் தேவை என்றால் மாத்திரமே, அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பேன். “கலவரம், மோதல்களால், தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

“கைதாகவோ, சிறைக்குச் செல்லவோ அல்லது மரணிக்கவோ நான் அச்சப்படுவன் அல்லன். எல்லாவற்றுக்கும் ஓர் ஒழுங்குமுறை காணப்படுகிறது. அடிப்படைவாதிகளைத் திருப்பதிப்படுத்துவதற்காகவே, என்னைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நான் நாய் இல்லை. இந்தச் செயற்பாட்டுக்கு, நான் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கவும் மாட்டேன், அதேபோல் எனது ஆதரவாளர்கள் இதற்கு இடமளிக்கவும் மாட்டார்கள்.  அதையும் மீறி என்னை கைது செய்வார்களேயானால், வழமைபோல, இந்த முறையும் சிறைக்கு செல்லும் போது நான் தனியாகப் போகமாட்டேன். மாறாக விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே, இம்முறை சிறைக்குச் செல்வேன்” எனவும் தெரிவித்தார்.