தமிழக – கேரள போலீஸாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர் கேரளாவில் பிடிபட்டார்: மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையோரப் பகுதியான அகளியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளரான காளிதாஸ் என்பவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள போலீஸாரிடம் பிடிபட்டார்.

தமிழக – கேரள எல்லைகளை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையின் அட்டப்பாடி, அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிகள் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தளமாக உள்ளது. இந்த இயக்கத்தினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பழங்குடி மக்களிடையே ஊடுருவி அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்புவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது, தாக்குதல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. கேரளாவில் இந்த அமைப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அங்கு ‘தண்டர்போல்ட்’ படையை போலீஸார் உருவாக்கியுள்ளனர். இந்த கண்காணிப்புகளை மீறி மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பீப்பிள் லிபரேஷன் கொரில்லா ஆர்மி (பிஎல்ஜிஏ) கமாண்டராக செயல்பட்டு வந்த காளிதாஸ் (எ) சேகர் (47) என்பவர் நேற்று கேரள போலீஸாரிடம் பிடிபட்டார். அட்டப்பாடி அருகே உள்ள அகளி வனப்பகுதியில் ஆயுதங்களுடன் அவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்று தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக இவர் மீது 2001-ல் கியூ பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2002-ல் தருமபுரியின் மாரண்டஹல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்விரு வழக்கு விசாரணைகளிலும் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அதன் பிறகு கேரள வனப் பகுதியில் தலைமறைவாக இருந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திலும் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அதிகரிப்பு

அட்டப்பாடியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பழங்குடி குழந்தைகள் பலியானதைக் கண்டித்து 2015-ல் முக்காலி என்ற இடத்தில் வனத்துறை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன்பின் தண்டர்போல்ட் போலீஸாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் அடிக் கடி துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன.

இதனிடையே, இயக்கத்தின் முக்கிய நபர்களான அஜிதா (எ) காவேரி, குப்புசாமி (எ) குப்பு தேவராஜ் ஆகியோர் கடந்த ஆண்டு மலப்புரம் அடுத்துள்ள நிலம்பூரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த பொருட்களில், தமிழக – கேரள – கர்நாடக மாநிலங்கள் இணையும் இடமான படுக்கா முச்சந்திப்பு வனப்பகுதியில் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதும், அதில் கர்நாடக மாவோயிஸ்ட் தலைவர் விக்ரம் கவுடா போன்றோர் இருப்பதும் போன்ற வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் மூன்று மாநில வனப்பகுதிகளையும் தளமாக மாற்ற அவர்கள் முயல்வது உறுதியானது.

இதையடுத்து, கேரள எல்லையோரம் உள்ளதால் கோவை, நீலகிரிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கோவையில் எல்லையோர, அச்சுறுத்தல் உள்ள 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தற்போது, காளிதாஸ் பிடிபட்டதைத் தொடர்ந்து இந்த சோதனைச்சாவடிகளிலும் தலா 14 போலீஸார் வீதம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட இருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.