தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சியில் போதைப்பொருள் வியாபாரிகள்

தமிழினத்தின் கல்வி, கலாசாரத்தை சீரழித்து தமிழ் இனத்தை அழிப்பதற்கான முயற்சியாக வடக்கில் போதைப்பொருள் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதாக அமைந்துள்ளது. மாணவர்களிடம் மாற்றங்கள் தெரிந்தால் அதிபர்கள் உடனடியாக பெற்றோருக்கு அறிவிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மகாநாடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து, கல்வி, கலாசாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாகவே போதைப் பொருள் பாவணையினை மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்கின்றார்கள்.

இதனால் எமது மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைகளாக மாறுகின்றார்கள். அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை வேதனையைத் தருவதாக அமைகின்றது. யுத்த காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்த சமூகம், யுத்தம் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மனவேதனையைத் தருகின்றது. வேண்டுமென்றே;று எண்ணத் தோன்றுகின்றது.

எம்மைச் சுற்றி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலீஸார் என காவற் படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரக்கணக்கான கிலோ கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் கடல மார்க்கமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம்.எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகிஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப் பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும்.

இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீதிபதிகள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்து கடுமையான முயற்சிகனை மேற்கொண்டிருக்கும் அதே நேரம் அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், மேலும் பெற்றோர்கள் எனப் பலரும் இவை பற்றிய மக்கள் விழிப்புணர்வைத் தொடர்ந்துஏற்படுத்திக் கொண்டிருப்பது முக்கியம் என்றார்.

மாநாட்டின் போது, ஆசிரியர் இ. இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாகாண கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரராஜா முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார். யாழ். வலயத்தில் இருந்து சுமார் 2500 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.