தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் “சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். “தமிழ்த் தேச தொழிலாளர்கள்” என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.
கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள்.
(Kalai Marx)