‘துரோகம் செய்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்’ – கருணா

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்பாறையில் தானும் வடக்கில் வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் தமது கட்சி போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தர்.

கருணா அம்மானின் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், மட்டக்களப்பு – நொச்சிமுனையில் நேற்று (08) நடைபெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், “கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

“இன்றும் சில நாள்களில் எமது மத்திய குழு மீண்டும் கூடும். அதிலேதான் எமது இறுதி முடிவை அறிவிப்போம். தற்போதைக்கு எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய பிரதான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, விஜயவதி முரளிதரன் ஆகியோர், எமது மத்திய குழுவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

“அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. நான் அங்கு போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளேன். திருகோணமலை மாவட்டத்திலும் வேட்பாளர் தெரிவு விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வன்னி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள், அவர்களின் உறவுகள் என்ற ரீதியில் எமது வேட்பாளர் தெரிவுகள் இடம்பெறும்.

“கிழக்கு மாகாணத்திலே பிரிவுகள் எற்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரிந்து நின்றால், அது வேறு சக்திகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும். எனவே, ஒற்றுமைக்காகப் பல விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றார்.