துஷ்பிரயோகம் செய்த மாணவர்களுக்கு வலை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.
 
பிரத்தியேக வகுப்பு என்ற பெயரில் வீடுகளில் சென்று கணித பாடம் கற்பித்துவந்த  அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் தெரிவான குறித்த சந்தேக நபர், முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில் ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக கணித பாடம் கற்பித்து வந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த 20ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் நண்பனான (18 வயது) கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்  பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23ஆம் திகதி அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார், ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.