தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை

பாராளுமன்றத்தில் கண்ணியத்துக்கும், கௌரவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சபை நடுவில் கைகலப்பில் ஈடுபட்ட பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும (ஐ.தே.க) மற்றும் கம்பஹா மாவட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவாரகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுகளின்போது சபை நடுவில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய சபாநாயகர் கரு ஜயசூரிய தடைதொடர்பான தனது தீர்ப்பை நேற்று சபையில் அறிவித்தார். இதன்படி இருவரும் இன்று முதல் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான தடை அமுலுக்கு வருகிறது.

இரு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தடைதொடர்பான பிரேரணைகளை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் முன்வைத்தார். இதற்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்கியதால் இப்பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் மஹிந்த ஆதரவு அணியினருக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடையில் மோதலானது.

இந்த சம்பவத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் தனது தீர்ப்பை நேற்று அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, சம்பந்தப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவும் அவர்களின் கட்சித் தலைமைகளுக்கும் அறிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையெனவும் கடுந்தொனியில் தெரிவித்தார்.

தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்ட அவர், சபைக்குள் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமானது பாராளுமன்றத்தின் உயரியத்தன்மைக்கும் கௌரவத்துக்கும் இழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் பாராளுமன்றம் குறித்து மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தலைதூக்கும்.

இந்த விவகாரத்தினால் பாராளுமன்றத்துக்கு மட்டுமன்றி எம்பிக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவாறு எம்.பிக்கள் நடந்துகொள்ள வேண்டும். அது சகல எம்பிக்களினதும் பொறுப்பாகும். பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பேணி பாராளுமன்றத்தின் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் எம்பிக்கள் நடந்துகொள்ள வேண்டும்.

எதிர்த்தரப்பு எம்பிக்கள் குழு சபை நடுவில் வந்து கோசம் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு எம்பிக்களும் சபையின் நடுப்பகுதிக்கு வந்ததால் மோதல் நிலை உருவானது.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற அனுமதிக்க முடியாது. இந்த சம்பவத்தின்போது பிரதானமாக ஒழுக்கத்தை மீறிச்செயற்பட்ட பாலித்த தெவரப்பெரும, பிரசன்ன ரணவீர ஆகிய உறுப்பினர்களின் நாடாளுமன்ற சேவைக்காலத்தை நிலையியற் கட்டளையின் 72 (2) பிரிவின் பிரகாரம் ஒருவாரகாலத்துக்கு இடைநிறுத்தும் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு சபை முதல்வருக்கு பணிப்புரை விடுக்கிறேன்.

விசாரணைக்காக நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சபையில் பதிவான வீடியோக் காட்சிகளை பார்த்து முழுமையாக ஆராய்ந்துள்ளனர்.

அவர்களின் விசாரணை தொடர்பில் பூரண நம்பகத்தன்மை உள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் மேற்படி முடிவுக்கு பெரும்பான்மையானோர் இணக்கம் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் குறித்து பின்னர் பேசுமாறு தினேஷ் குணவர்த்தன எம்பிக்கு பல தடவைகள் அறிவுறுத்தினேன்.

அதனைப் பொருட்படுத்தாது அவர் உரையாற்றினார் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பான தீர்ப்பு தாமதித்து வெ ளியிடப்படுவது குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சபாநாயகர், இவ்வாறான சம்பவங்களின் போது தீர்ப்பு வழங்கும்போது, முன்னர் வழங்கப்பட்ட முன்மாதிரிகளும் உள்ளன. முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தன தொடர்பான சம்பவம் 21ஆம் திகதி நடைபெற்றபோதும் அது தொடர்பான தீர்ப்பு 29ஆம் திகதியே வழங்கப்பட்டிருந்தது என்றார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அடங்கலான குழுவின் அறிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், மேற்படி குழுவின் அறிக்கை தொடர்பில் தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். சபை நடுவில் கோஷம் எழுப்பியவர்கள் தன்னை அச்சுறுத்தியது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தான் அது தொடர்பில் பொலிஸில் முறையிட முற்படவில்லை என்றும் கூறினார்.

இரு எம்பிக்களும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது மஹிந்த ஆதரவு அணியினர் அதற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டு வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலும் மஹிந்த ஆதரவு அணியினர் இடைக்கிடை எழுந்து சபாநாயகரின் தீர்ப்புத் தொடர்பாக கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கது.