நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் ஊடகங்களுக்கு பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் செய்த பாவங்களையே தற்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சயிட் அல் ஹூசெய்ன் வடக்கு கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி அடைந்துள்ளார்.

நாட்டின் கலாச்சாரத்திற்கோ அல்லது பொருளாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது. இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் எமது அரசியல் எதிரிகள் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது. நாட்டு மக்கள் எமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியமை நாட்டை முன்னோக்கி நகர்த்தவேயன்றி பின்னோக்கி நகர்த்துவதற்கு அல்ல. நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்யத் நான் தயார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை. சிலர் ஊடகங்களுக்கு பலவாறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நான் அவர்களுக்கு கூறுவது ஒன்றே ஒன்றுதான் அவர்கள் செய்த பாவங்களைத்தான் நாங்கள் இப்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.