‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’

சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரைப் பழிவாங்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது என்றார்.

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் குறைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது தொடர்பில், நாடாளுமன்றத்தில், நேற்று (18) கேள்வியெழுப்பி, கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடக்கில் இராணுவ முகாம்களை நீக்குவதும் படையினரின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 33 படையணிகள் நீக்கவும் 9,038 பதவிநிலை அதிகாரிகளையும் 23 ஆயிரம் படையினரையும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சுமார் 150 முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இது தொடர்பில், இராணுவத்தலைமையத்தில் இருந்து வரைபொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதெனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இதன்பின்னரே, இத்தரவு வெளிவந்துள்ளது. இவற்றைப் பார்க்கும் போது, பழிவாங்கும் செயற்பாட்டுக்குள் இராணுவத்தினர் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்களா என எண்ணத்தோன்றுகின்றது. இந்த நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளுக்கும் தமிழ் புலம்பெயர் சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகள் இதுதானா என்றும் வினவினார்.

“வடக்கில், பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது. முதலாவதாக சைனட் குப்பியைக் கடித்தவருக்கு அரசாங்கத்தின் செலவில் நினைவுத்தூபி  அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில், இராணுவத்துக்குச் சொந்தமான 84 ஆயிரம் ஏக்கர் காணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மீண்டும் புலிகள் உருவாக வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கூறுகிறார்.  அவையெல்லாம் எதற்காகச் செய்யப்படுகின்றது.

“நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இராணுவத்தினருக்குப் பதவியுயர்வு இல்லை. வெளிநாட்டுப் பயிற்சிகள் கூட இல்லை. மாறாக பழிவாங்களுக்கு மட்டுமே ஆளாக்கப்படுகின்றனர். எனவே, வடக்கில் முகாம்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தமுடியுமா என இங்கு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

இதையடுத்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல,

இராணுவம் பழி வாங்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணி கூறுகிறது. அவர்களது ஆட்சிக் காலத்தில், சரத் பொன்சேகா இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை என்னவென்று கூறுவது? என வினவினார்.

இதனால், சபையில் கூச்சல் எழுப்பப்பட்டது. இதனிடையே எழுந்த, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான விமல் வீரவன்ச,

“இராணுவத் தளபதியால் உண்மையான நிலைவரத்தை வெளிபடுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே, இராணுவத்தினரின் கடிதத்தையும் வரைவையும் வைத்துக்கொண்டு செயற்படுவதை விடுத்து, சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள்” என்றார்.