மலையகம்: பெரு மழை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்

பதுளை – கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையின், அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், 109ஆவது மைல் கட்டைப்பகுதியில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மலையக ரயில் சேவைகள் தாமதமாகி சென்றன. அதன் பின்னர் பாதிப்பு ஏற்பட்ட தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில், ரயில்  நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன. தற்பொழுது தண்டவாளங்கள் சீர்செய்துள்ளதோடு, மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக, அட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மலையக பகுதிகளில், இன்று பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாகவே, இந்த தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

தலவாக்கலை – நானுஓயா பகுதியில் உள்ள எட்டு குடும்பங்கள், மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக, அயலவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன. இத்தோட்டத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பாரிய வெப்புகளும் காணப்படுகின்றன. இதேவேளை, பல இடங்களில் நிலம் தாழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயநிலை காரணமாக, வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, நேற்று காலை அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர், போக்குவரத்து வழமைக்கு திரும்பின. தொடர்ந்தும், நேற்று மாலை அவ்வீதியில் ஏற்பட்ட மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டது. இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

அதனை தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், அட்டன் பொலிஸாரும் இணைந்து அவ்வீதிக்கு அருகில் புதிய வீதியை அமைத்து நேற்றிரவு 10 மணி முதல், அவ்வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர். அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது. எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.