பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (12) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், துன்னாலை – வேம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஹன்டர் ரக வாகன சாரதி மீது, பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதையடுத்து, பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு கற்கள் வீசியமை, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், இதுவரையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.