‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????

பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் கையளிக்கப்படும்” என, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள காணிகளை, 25 வருடங்களாக கடந்த அரசாங்கம் கொடுக்கவில்லை. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றிய பின்னரே மீள்குடியேற்றம் சாத்தியப்பட்டது.

“எதிர்வரும் காலங்களிலும், தனியார் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. அதற்குரிய முழு வேலைத்திட்டங்களும், வலி. வடக்கில் நடைபெற்று வருகின்றன.

“போர் முடிவுற்றப் பின்னர், பலாலி பகுதியில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆயுதங்களை இராணுவத்தினர் வெளியில் கொண்டுச் செல்ல வேண்டும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆயுதக் களஞ்சியசாலையை வேறு இடங்களுக்கு மாற்றி, ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின்னர், அந்தக் காணிகளை பொதுமக்களிடமே மீள வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

“மேலும், காரைநகரில் இன்னும் 50 ஏக்கர் காணிகளை மேலதிகமாக கடற்படையினர் சுவீகரித்து உள்ளனர். 24 குடும்பங்களுக்கு அந்த காணிகளில் வீடமைத்து கொடுப்பதற்கு என 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடற்படை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு கிழமைக்குள் அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். கடற்படையினர் அந்த காணியை சுவீகரிக்க எக்காரணம் கொண்டும் இடமளிக்க மாட்டேன்” என, விஜயகலா மகேஸ்வரன் மேலும் கூறினார்.