பஸ் நிலைய விவகாரம்: ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை, சேவைகளை முன்னெடுக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் உத்திரவிட்டமையைக் கண்டித்து, வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

புதிய பஸ் நிலையமானது கடந்த ஒரு வருடகாலமாக செயற்படாமல் உள்ள நிலையில், டிசெம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து பழைய பஸ் நிலையத்தை மூடி, புதிய பஸ் நிலைய்துக்கு அனைத்து பஸ் சேவைகளும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் உத்திரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் பொலிஸார் இணைந்து பழைய பஸ் நிலையத்தைப் பரல்களைக் கொண்டு பஸ்கள் உள் செல்ல முடியாதவாறு மூடியிருந்தனர்.

இந்நிலையில், தாம் நீண்ட காலமாக பயன்படுத்திய பழைய பஸ் நிலையத்தை மூடியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாணம் பூராகவும் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டமையைக் கண்டித்து, அதனை சூழ இருந்த வர்த்தகர்கள் கடைகளை மூடியும் கறுப்புக்கொடிகளை கட்டியும், தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

எனினும், நாளை (02) பாடசாலை நாள் என்பதால், தையலகங்கள் நடத்தும் வர்த்தகர்கள் மாணவர்களின் நலன்கருத்தி கடைகளை திறந்திருந்ததுடன், கடைகளை மூடுமாறு தெரிவித்த வர்த்தகர்களுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தனியார் பஸ் உரிமையாளர்கள், பயணிகளின் நலன் கருதி, பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை இலவச பஸ் சேவையை முன்னெடுத்துள்ளதுடன், வட மாகாணத்துக்கான அனைத்து சேவைகளையும் அதிகரித்துள்ளனர்.

இதேவேளை, அறிவித்தல்கள் பொதுமக்களுக்கு போதுமானதாகக் கிடைக்காமையால், பயணத்தை மேற்கொள்ள வந்த பயணிகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து தனியார் சேவைகளும் ஈடுபட்டு வருவதால் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நாளை (02) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் பட்சத்தில், பருவச்சீட்டுக்களைக் பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.