எச்சரிக்கை

(கருணாகரன்)

கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம், பாடசாலைகளிலும் கல்வி நிர்வாகத்திலும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே! கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு பிரதான பாடசாலைகளின் மாணவர்கள் வெளிப்படையாகவே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பல பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் ஈடுபட்டனர்.

சில பாடசாலைகளின் மாணவர்களும் சில தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களும் பரப்புரை நடவடிக்கைகளில் பகிரங்கமாகவே ஈடுபடுத்தப்பட்டனர்.

பல மாணவர்களுக்கு பியர் உள்பட பல உபகாரங்கள் செய்யப்பட்டன.

இதையெல்லாம் பலரும் அறிந்திருந்தனர். இருந்தும் எல்லோரும் மௌனம் காத்தனர். விளைவு கடந்த ஆண்டு வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

கல்வி மட்டுமல்ல, இளைய தலைமுறையை சீரழிக்கும் நடவடிக்கையும் தேர்தல் வெற்றிக்காக மேற்கொள்ளப்பட்டது. அதையும் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர் உள்பட அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அங்கீகரித்தனர்.

இப்போது வந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் இவ்வாறான ஒரு களமாடலுக்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

முதற்கட்டமாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருடைய அரசியல் உரிமையையும் இங்கே நாம் அங்கீகரிக்கிறோம். ஆனால், இங்கே ஆசிரியர்கள் களமிறக்கப்பட்டிருப்பது அவர்கள் பொதுச் சேவையாற்றுவதற்காக அல்ல. மாறாக மாணவர்களின் மூலமாக பெற்றோர்களின் வாக்குகளைப் பெறும் தந்திரோபாயமாகவே.

இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் சிலர் தமது செல்வாக்குக்குட்பட்ட மாணவர்களைப் பரப்புரைக்குப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இனி மெல்ல மெல்ல ஒவ்வொரு விசயங்களும் ஆரம்பமாகும்.

இதற்கிடையில் ஒரு பாடசாலையில் இரவு நேரம் பரப்புரை தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டமும் கலகலப்பாக நடந்துள்ளது.

எல்லோருக்கும் இந்தச் சேதி சமர்ப்பணம்.

(பொது நன்மை கருதி பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)