பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறிநிலை.!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 இடங்களுக்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் , மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன. 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பத்துகோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர். சுமார் எட்டு லட்சம் ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நேற்று இரவே தொடங்கியது. 8 மணிக்கு மேல் முன்னிலை விவரங்கள் வெளியாகத் தொடங்கின.
கராச்சியில் போட்டியிட்ட இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார்..அவரது கட்சி 112 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு இம்ரான் கான் நன்றி தெரிவித்துக் கொண்டார். தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தொண்டர்கள் நாடுமுழுவதும் உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு 65 இடங்களும், பிலாவல் பூட்டோ கட்சிக்கு 43 இடங்களும் இதர கட்சிகளுக்கு 50 இடங்களும் கிடைத்துள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்பதால் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் வலிமை கிடைக்கவில்லை, எனவே, இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தானில் கூட்டணி அரசுதான் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.