உலகக் கிண்ணம் 2018

(ச. விமல்)

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது. பிரான்ஸ் அணி சம்பியனாக இரண்டாவது முறையாக மகுடம் சூடிக்கொண்டது. சரியாக 20 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது. மறுபுறத்தில் அதே 1998 ஆம் ஆண்டு மிக அபாரமான அறிமுகத்தை மேற்கொண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்விடையடைந்த குரேஷியா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்திருந்தது. இம்முறை பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை இழந்துள்ளது. வரலாறு அப்படியே ஒரு முன்னேற்றத்துடன் அதே முடிவை வழங்கியுள்ளது. வரலாறுகள் பொய்ப்பதில்லை எனக்கூறுவது இதனைத்தானோ?

விறுவிறுப்பான ஒரு இறுதிப் போட்டி. ஆனால் 6 கோல்கள் பெறப்பட்ட போட்டி. 4 -2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. குரேஷியா அணி இறுதி வரை விடாமல் போராடியது. அதுவே அவர்களின் பலம். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விட கோல் பெறுவதே முக்கியம் என்பதை இந்த உலகக் கிண்ணம் வெளிக்காட்டியது. அதேதான் இப்போட்டியிலும் நடைபெற்றது. தற்கால நவீன கால்பந்தின் யுக்தியாகவும் அதுவே இருந்து வருகிறது. எதிரணியிடம் இருந்து பந்தைப் பறித்தது தாக்குதல் செய்வது. பிரான்ஸ் அணி பெற்ற கோல்கள் நான்குமே குரோஷிய வீரர்களின் தவறுகளால் பெறப்பட்டவை. ஆர்ஜன்டீன அணியுடன் எவ்வாறு பிரான்ஸ் அணி கோல்களைப் பெற்றதோ அதே பாணியில் தான் இப்போட்டியிலும் கோல்களைப் பெற்றார்கள். குரோஷிய அணி பலமான பின் வரிசை அணியாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய அணி. அதிகளவில் கோல்களைப் பெற அனுமதிக்கவில்லை. எனவேதான் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள். ஆனால், இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி குரேஷிய அணியின் பின் வரிசையை பிரான்ஸ் தகர்த்தது என சொல்வதிலும் பார்க்க குரோஷிய அணியின் பின்வரிசை வீரர்கள் விட்டுக்கொடுத்தார்கள் என்ற நிலைமையே காணப்பட்டது.

பிரான்ஸ் அணியின் பலமான முன் வரிசை அவர்களின் வெற்றிக்கு முக்கியமாகக் கைகொடுத்தது. மிக முக்கியமாக அன்டோனி கிறீஸ்மனின் மிகச்சிறப்பான விளையாட்டு இறுதிப் போட்டியில் மட்டுமல்ல, இந்த உலகக் கிண்ணத் தொடர் முழுவதுமாக பிரான்ஸ் அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. அதேவேளை சிறந்த இள வயது வீரருக்கான விருதை பெற்றுக்கொண்ட பிரான்ஸ் அணியின் கிலியான் மப்பே மிகவும் சிறப்பான விளையாட்டு திறமையைக் காட்டினார்.

குரேஷிய அணி இறுதிப் போட்டி என்றதும் அவர்களுக்குள் பதட்டம் ஏற்பட்டுவிட்டது. முதல் இரண்டு கோல்களையும் பிரான்ஸ் பெற்றதும் உடைந்து போய் விட்டார்கள். மீண்டு வந்து தாங்கள் கோல் பெறும் முயற்சிகளை எடுப்பதற்குள் பிரான்ஸ் அணி தனக்கு தேவையான கோல்களைப் பெற்று விட்டது. குரோஷிய அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் நல்ல அணியாக பதட்டப்படாமல் நேர்த்தியான அணியாக விளையாடினார்கள். இவர்கள் நல்ல ஆரம்பத்தையும் நல்ல முடிவையும் செய்வார்கள். நடுவில் கொஞ்சம் இலகுவாக விடுவார்கள். இப்போட்டியில் அதுதான் நடந்துள்ளது. விலகல் சுற்றின் மூன்று போட்டிகளிலும் முதல் கோலை குரேஷியா அணிக்கு எதிராக விளையாடிய அணிகளே பெற்றிருந்தனன. குரோஷிய அணி பின்னர் துரத்தி அடித்தே வெற்றிகளை பெற்றுள்ளார்கள். இறுதிப் போட்டியிலும் அதேதான் நடந்தது. ஆனால் பிரான்ஸ் அணி பெற்ற கோல்களை துரத்தி அடிக்க நேரம் போதுமாக இருக்கவில்லை. ஆனால் நல்ல அணியாக பலமான அணியாக இவர்கள் தொடர்வார்கள் எனப்தில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கிண்ணத்தின் மூலம் ஏராளாமான ரசிகர்களை சேர்த்துள்ளார்கள். அதுக்கு அவர்களுடைய நாட்டின் பெண் ஜனாதிபதி கூட காரணம் தான். விளையாட்டுக்கு எந்தளவு முக்கியம் வழங்குகிறார்கள் என்பதனை அது வெளிக்காட்டுகிறது. நம்மவர்கள் அவர்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும்.

21 உலகக் கிண்ண தொடர்கள் நிறைவடைந்துள்ளன. இறுதிப் போட்டியில் 6 கோல்கள் மொத்தமாக பெறப்பட்ட நான்காவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. அதிலும் 4-2 என்ற முடிவு பெறப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போட்டியில் மேலதிக நேரத்தில் நிறைவடைந்தது. மிகுதி மூன்று போட்டிகளிலும் 90 நிமிடங்களில் நிறைவடைந்த போட்டிகளாகும். பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் 1958 ஆம் ஆண்டு சுவீடன் அணியை வெற்றி பெற்ற போட்டியே இறுதிப் போட்டியில் கூடுதலான கோல்கள் அடிக்கப்பட்ட போட்டியாகும்.

பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குரோஷிய ரசிகர்கள் மற்றும் பிரான்ஸ் வெறுப்பாளர்கள், இன அடிப்படையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆபிரிக்கர்களை வைத்து பிரான்ஸ் அணி வெற்றிபெற்று விட்டது. வேறு நாட்டவர்களை வைத்து கிண்ணத்தை வென்றுவிட்டார்கள் போன்ற கருத்துக்களை அதிகமாக இலங்கையில் பார்க்க முடிகிறது. ஆபிரிக்க நாட்டவர்கள் அவ்வளவு பலமானவர்களா இருந்தால் ஆபிரிக்க நாடுகள் வெற்றிபெற்றிருக்க முடியும். இலங்கையில் இது இப்போது எல்லோருக்கும் பழக்கப்பட்ட ஒரு விடயமாக மாறி வருகிறது. விளையாட்டை சரியான முறையில் ரசிப்பதில்லை. வீரர்களுக்கும், விளையாட்டுக்குமான மதிப்பை வழங்குவதில்லை. கிரிக்கெட் விளையாட்டில் எமது நாடு விளையாடுகிறது. அதனால் வென்றலோ தோற்றாலோ இவ்வாறான கருத்துக்களை எதிரணிகள் மீது சொல்வதும், சாடுவதும் பரவாயில்லை என்று விட்டு விடலாம். இப்போது பார்த்தால் எங்களுக்கு சம்மந்தமில்லாதா நாடுகள் இரண்டு விளையாடியுள்ளன. வெற்றி தோல்விகளை அவர்கள் சரியாக பகர்ந்து கொண்டு சென்று விட்டார்கள். இங்கே இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களும் வசைபாடல்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்படுகிறன்ற. இக்கலாசாரம் மாற்றப்பட வேண்டும். உணமையான விளையாட்டு பிரியர்கள், இரசிகர்கள் மற்றும் உண்மையான விளையாட்டு வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். விளையாட்டை பற்றி தெரியாத, இந்த சமூக வலைத்தளங்களின் போராளிகள் என சொல்லிக்கொள்பவர்களால்தான் இவ்வாறான அவதூறான விடயங்கள் ஏற்படுகின்றன. இவர்கள் போன்றவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்காமல் ஒதுக்கி வைப்பதே விளையாட்டுக்கு ஆரோக்கியமானது.

மூன்றாமிட போட்டி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. பெல்ஜியம் அணி விளையாடிய ஆட்டத்தைப் பார்த்த போது, இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டிய அணி மூன்றாமிடத்தை பெற்றதே என்றுதான் மனதில் தோன்றியது. இரண்டு அணிகளுக்குமான போட்டி, பெல்ஜியம் அணியின் பக்கமாக இருந்த போட்டியாகவே அமைந்தது. 2-0 என இலகுவான வெற்றியயை பெல்ஜியம் அணி பெற்றுக்கொண்டது. இந்த உலகக் கிண்ண தொடரில் இரண்டாவது முறையாகவும் பெல்ஜியம் அணி இங்கிலாந்து அணியினை வெற்றிபெற்றுக்கொண்டது. மூன்றாமிட போட்டியில் வேகமாகவும், சிறப்பாகவும் அமைந்தது பெல்ஜியம் அணியின் விளையாட்டு.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியவர்கள் வெற்றி பெற்று முதற் தடவையாக மூன்றாமிடத்தை தமதாக்கிக் கொண்டார்கள். 1986 ஆம் ஆண்டு முதற் தடவையாக மூன்றாமிடத்துக்கான போட்டியில் விளையாடி பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தார்கள். ஆக குரோஷியா, பெல்ஜியம் அணிகளுக்கு எப்போதுமே வில்லனாக பிரான்ஸ் அணியே இருந்து வருகிறது. இம்முறை பெல்ஜியம் அணியின் இறுதிப் போட்டி கனவை தகர்த்தார்கள். 1986 ஆம் ஆண்டு மூன்றாமிடத்தை தகர்த்தார்கள். குரோஷியா அணிக்கான இறுதிப் போட்டி வாய்ப்பை 1998 ஆம் ஆண்டு இல்லாமல் செய்த பிரான்ஸ், இம்முறை கிண்ணத்தை வெற்றிபெறும் வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளார்கள். இரண்டு அணிகளும் அடுத்த உலகக் கிண்ணத்தில் கட்டாரில் வைத்து பழி தீர்ப்பார்களா? இன்னமும் நான்கு ஆண்டுகள் காத்திருப்போம்.

இம்முறை நடைபெற்ற தொடரில் சிறந்த வீரராக குரேஷியா அணியின் தலைவர் லூக்கா மோட்ரிச் தெரிவானார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது. கூடுதலான ஆறு கோல்களை அடித்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் தங்க காலணி விருதை வெற்றி பெற்றார். தங்க கையுறை விருதான சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை பெல்ஜியம் அணியின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா பெற்றார். சிறந்த இள வயது வீரருக்கான விருததை பிரான்ஸ் அணியின் முன் வரிசை வீரர் கிலியான் மப்பே பெற்றார். சிறந்த ஒழுக்கமான அணிக்கான விருது ஸ்பெய்ன் அணிக்கு கிடைத்தது. இந்த உலகக் கிண்ண தொடரின் சிறந்த கோலுக்கான மக்கள் தெரிவு விருது எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.fifa.com) வெளியிடப்படவுளள்து. சிறந்த கோலுக்கான வாக்குகள் மக்கள் தெரிவாகவே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.