பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்

தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து எந்தவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் தெரிவிக்குமாறு, சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் இருவரை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்வாண்டு மார்ச்சில் கோரியதாக, முன்னாள், இந்நாள் அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வொஷிங்டன் போஸ்ட், நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே காணப்பட்ட தொடர்புகள் குறித்து எதுவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் கூறுமாறு, ஐக்கிய அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் டேனியல் கோட்ஸ், தேசிய பாதுகாப்பு முகவரத்தின் பணிப்பாளர் மைக்கல் றோஜர்ஸ் ஆகியோரையே ஜனாதிபதி ட்ரம்ப் கோரியிருந்த நிலையில், இது பொருத்தமற்றது எனத் தெரிவித்து, கோட்ஸும் றோஜர்ஸும், கோரிக்கையின்படியொழுக மறுத்ததாக, இந்நாள் அதிகாரிகள் இருவரும் முன்னாள் அதிகாரிள் இருவரும் தெரிவித்ததாக, வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்பின் பிரசாரக் குழுவுடன் இணைந்துள்ள தனிநபர்களுக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்குமிடையே, பிரசாரக் குழுவுக்கும் ரஷ்ய நடவடிக்கைகளுக்குமிடையே தொடர்புகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து, புலனாய்வு கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ) விசாரணை செய்வதாக, எ.பி.ஐ-இன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி, பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவிடம், இவ்வாண்டு மார்ச் 20ஆம் திகதி தெரிவித்தமையினைத் தொடர்ந்தே, தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே காணப்பட்ட தொடர்புகள் குறித்து எதுவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் கூறுமாறு, கோட்ஸையும் றோஜர்ஸையும் ஜனாதிபதி ட்ரம்ப் கோரியுள்ளார்.

றோஜர்ஸுடனான, ஜனாதிபதி ட்ரம்பின் உரையாடல், தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினால் எழுதப்பட்ட செயற்குறிப்பொன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், கோட்ஸுடனான உரையாடல் இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டதா எனத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையை மேற்கோள்காட்டி, மேற்படி விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்க, தேசிய பாதுகாப்பு முகவரகமும் கோட்ஸின் பேச்சாளர்களிலொருவரான பிரயன் ஹேலும் மறுத்து விட்டனர்.

இதேவேளை, அடையாளந்தெரியாத தனிநபர்களிடமிருந்தான சட்டரீதியற்ற கசிவுகளை மேற்கோள்காட்டிக் கூறப்படுபவற்றை வெள்ளை மாளிகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ மாட்டாது என, வெள்ளை மாளிகையின் பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.