‘புலிகளை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பு அச்சுறுத்துகிறது’

ஜனாதிபதித் தேர்தலையும் காலம் தாழ்த்துவதற்கே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் ​கொண்டுவரப்பட்டதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தது.

பத்தரமுல்லை – நெளும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோது, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு, தவறான காரணங்களுக்காவும் சர்வதேசம் மற்றும் புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவும், புதிய அரசமைப்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கு எத்தனிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பை நாட்டு மக்கள் கேட்கவில்லை. தங்களது பொருளாதாரச் சுமை குறைக்கப்பட வேண்டும் என்றே கேட்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தற்போதைய அரசமைப்பு நீடித்தால், நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படுமென்றுக் கூறியுள்ளார். இப்படி சம்பந்தனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து புதிய அ​ரச​மைப்பு கொண்டுவரப்படுமானால், அது மக்களுக்கு இழைக்கும் துரோகமென்றும் அவர் எடுத்துரைத்தார்.

சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர் அதனைப் பயன்படுத்துவதில்லை எனக் குற்றஞ்சுமத்திய பீரிஸ், தேர்தலை எந்த முறைமையில் நடத்தினாலும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு, ஒன்றிணைந்த எதிரணி தயாரெனவும் கூறினார்.