புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர்.

கந்தசாமி கருணாநிதி, வீரசிங்கம் சுலக்சன், செல்வநாயகம் ஜோன்ஸன் ஆகிய மூன்று சந்தேக நபர்களையுமே, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல விடுதலை செய்தார்.

பிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஏனைய 14 பேர், புனர்வாழ்வளிப்பதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேகநபர்களின் அறிக்கையைக் கருத்திற்கொண்டு, அவர்களது புனர்வாழ்வு சம்பந்தமான முடிவை எடுப்பதற்கான வழக்கை, பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 21பேரை, எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான அமரானந்த, சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் முடியவில்லை எனவும், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரியதற்கிணங்கவே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வழக்குகள் ஜூன் 1ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.