பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து

துருக்கியின் குடிபெயர்ந்தோர் மத்தியில் துருக்கி மேற்கொண்டுவரும் அரசியல் பிரசாரம் தொடர்பான பிரச்சினையொன்றில், றொட்டர்டாமில் துருக்கி அமைச்சர்கள் நேற்று முன்தினம் (11) பேசுவதை, நெதர்லாந்து தடுத்துள்ளது. இதனையடுத்து, எஞ்சியிருக்கும் நாஸி என நெதர்லாந்தை, துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவான் விளித்துள்ளார். றொட்டர்டாமிலுள்ள துருக்கித் துணைத் தூதரகத்துக்குள் நுழைய, துருக்கியின் குடும்ப அமைச்சர் பாத்மா பெதுல் சயான் காயா, பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, ஏற்கெனவெ இருந்த பிரச்சினை, பாரிய இராஜதந்திர சம்பவமாக மாறியிருந்தது.

துணைத் தூதரகத்துக்கு வெளியே இருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், துருக்கிக் கொடிகளை அசைத்தபடி, அமைச்சரைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில், கூட்டத்தினைக் கலைப்பதற்காக, நாய்களையும் நீர்த்தாரையையும் நேற்று (12) அதிகாலையில், பொலிஸார் பயன்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, போத்தல்களையும் கற்களையும் சனத்திரள் எறிந்திருந்த நிலையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தான் திரும்பி ஜேர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, பாத்மா பெதுல் சயான் காயா, டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதேவேளை, துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு றொட்டர்டாமுக்குச் செல்வதற்கு, நெதர்லாந்து அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை (10) தடை விதித்திருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம் இடம்பெறவுள்ள தேர்தலில், இஸ்லாமுக்கெதிரான கட்சியான ஜீர்ட் வில்டெர்ஸிடம் மோசமாகத் தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படும் நெதர்லாந்து அரசாங்கம், துருக்கி அமைச்சர்களின் வருகைகள் விரும்பத்தகாதது எனத் தெரிவித்ததுடன், நெதர்லாந்தில் துருக்கி அமைச்சர்கள் மேற்கொள்ளும் பொதுவெளி அரசியல் பிரசாரத்துக்கு, நெதர்லாந்து ஒத்துழைக்காது என்று கூறியுள்ளது.

இந்நிலையில், விடுமுறையில் உள்ள, துருக்கிக்கான நெதர்லாந்துத் தூதுவர் திரும்புவதை சில காலத்துக்கு விரும்பவில்லை என, துருக்கி வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தவிர, துருக்கித் தலைநகர் அங்காரவிலுள்ள நெதர்லாந்துத் தூதரகத்தையும், இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதகரத்தையும் துருக்கி அதிகாரிகள் மூடியுள்ளனர்.

துருக்கி ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவாகவே, குறித்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.