பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு

யாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது, ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவது, கலை, கலாசாரம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட உபகுழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழு சர்வதேச நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் பேரவைக்கு அறிவிக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக தமிழ் மக்கள் பேரவை அமைந்திருப்பதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வடமாகாண முதலமைச்சர் பதிலளித்திருந்தார்.

தமிழ் மக்கள் பேரவையில் எவருமே பின்கதவால் வரவில்லை. முன்கதவால் தான் வந்தார்கள். எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் வாருங்கள் என நாங்கள் அழைப்பு விடுத்தோம். அதனையேற்றே சகலரும் வந்துள்ளனர்.

சுமந்திரன் மட்டுமல்லஎவர் வேண்டுமென்றாலும் இணைந்துகொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகள் என்ற கொள்கையை கொண்டிருந்தால் எவரும் இணைய முடியும்.

பலவிதமான கருத்துக்கள் சேர்ந்தது தான் ஜனநாயகம். எங்கள் மீது மற்றவர்கள் தவறான கருத்துக்களை கொண்டுள்ளார்கள் என்பதற்காக அவர்களை எமது எதிரிகளாக நினைப்பது தவறு. ஏதோ ஒரு காரணத்திற்காக எமது பாரம்பரியத்தினை அவருடன் அல்லது என்னுடன், அந்தக்கட்சி அல்லது இந்தக் கட்சி என்று எங்களை நாங்களே பாகுபடுத்தும் நிலைமைக்கு வந்திருக்கின்றோம் என அவர் பதிலளித்தார்.

தமிழ் மக்கள் பேரவைக்கு இணைத்தலைமை வகித்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், மக்களினுடைய ஒரு பேரவை மக்களால் ஸ்தாபிக்கப்பட்டு, சில காரணங்களுக்காக சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேணடுமென்றே கரிசனையில் நடவடிக்கைகளை எடுத்து அதன் பின்னர் என்னுடன் வந்து கலந்தாலோசித்தார்கள்.

எப்படியானவர்கள், எவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்து, எமது வடமாகாண சபையின் விஞ்ஞாபனத்தில் எவை தமிழ் மக்களினுடைய வருங்காலத்தினை எடுத்துச் செல்வன என்று கருதியிருந்தோமோ, அவற்றினை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இவர்களுடைய நடவடிக்கைகள் இருப்பதன் காரணமாக என்னுடைய ஒத்துழைப்பினை நல்குவதாக கூறினேன் என்றார்.

முதற்கட்டமாக தமிழ் மக்கள் பேரவை சில முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்த நிபுணர் குழு மிக குறுகிய காலத்தில், அரசியல் தீர்வு விடயத்தில் உள்ள முக்கிய அம்சங்களை கொண்ட ஆரம்ப கட்ட அறிக்கையினை முன்வைத்து, அந்த அறிக்கை தமிழ் மக்கள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பொது மக்களுக்கு கட்டாயமாக வெளிப்படுத்தப்படும்.

அந்த செயற்திட்டத்தினை எதிர்வரும் 01 மாத காலத்திற்குள் வெளிப்படுத்துவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வெளிப்படுத்தல் மட்டுமன்றி இந்த தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற 30ற்கும் அதிகமான உறுப்பினர்களில், 4 முதல் 5 பேர் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், ஏனையோர் அரசியலுடன் தொடர்பு இல்லாதவர்கள். எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் இறுதி ஆவணத்தினை வெளியிடுவோம் என்றார்.

நேற்றைய கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழுவின் கட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சார்பாக இருவரும், அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை முன்மொழிந்துள்ளார்கள். சமூக ஆர்வலர்கள் சார்பாக 5 நபர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். 15 பேர் கொண்ட குழுவினர் அரசியல் தீர்வு குறித்த விடயங்களை கையாளவுள்ளனர்.

அரசியல் தீர்வு குறித்து விஞ்ஞான ரீதியான ஆவணத்தினை முன் வைப்பதே எமது நோக்கம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும், என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற விடயங்கள் சம்பந்தமாக மக்களின் பங்களிப்புடன் இக்குழு, தமிழ் மக்கள் பேரவைக்கு முன்வைப்பார்கள். அதற்குரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உப குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்.

அதேவேளை, 5 அங்கத்தவர்களைக் கொண்ட ஆலோசனை சபைகளும் அமைக்கப்படவுள்ளன.