பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை

சம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி

பங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், கடந்த வௌ்ளிக்கிழமை இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றது. இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. இருந்தபோதும் இச்சந்திப்பில் என்ன கலந்துரையாடப்பட்டது என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்க இரு தலைவர்களும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டமையானது எதிர்க்கட்சித் தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்று சக்தியாக உருவாக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருவதுடன், தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதேநேரம், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பின்கதவால் வந்து மக்களின் ஆணைக்கு எதிராக செயற்பட முயற்சிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். அவருடைய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தில் உரையாற்றியிருந்த வடமாகாண முதலமைச்சர்,தேர்தலில் தோல்வி அடைபவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற கருத்து மறைய வேண்டும்.

தேர்தலில் தோற்றவர் தானே என்று எமது மக்கள் மாண்மை மறந்து அநாகரீகமாகப் பேசுவது நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்தக் கருத்தானது, கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரையே சுட்டி நிற்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஒருசிலருடைய செயற்பாடுகளால் கூட்டமைப்புக்குள் குழப்பம் அதிகரித்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு நிற்கின்றன. குறிப்பாக நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொடின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நான்கு கட்சிகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டு கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்திருப்பது கூட்டமைப்புக்கள் கருத்து வேறுபாடுகள் முற்றியிருப்பதை வெளிக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

விளக்கம் கோரும் மாவை

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலத்திடம் விளக்கம் கோரப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்டக் கூட்டம் நேற்று(28) ஞாயிற்றுக்கிழமை யாழ் பொது நூலக கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத் தொடரில் தாம் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பங்கேற்றதாக பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடற்திற்கு அறிவிக்காது பேராசிரியர் சிற்றம்பலம் குறித்த கூட்டத் தொடரில் பங்கேற்றமை தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்படும் என மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறினார்.

அதேநேரம், கட்சி சார்பாக யார்வந்தாலும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொள்ள முடியும் என இதில் கலந்துகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். கட்சி சார்பாக யார்வந்து இணைந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.

அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றல்ல. சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.