பௌத்தர்களே இல்லாத சாம்பல் தீவுச் சந்தியில் புத்தர் சிலை எதற்கு?’

சாம்பல் தீவுச் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் சுற்றளவில், பௌத்த மதத்தைச் சேர்ந்த எவருமே இல்லாதபோது, அந்தச் சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ள உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.காந்தரூபன், இந்த விவகாரம் நல்லாட்சியைக் குழப்புவதற்கான சூழ்ச்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெறும் சில சம்பவங்கள் நல்லட்சிச் சூழலை குழப்புவதற்கென விசமிகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே நான் கருதுகின்றேன்.

திருகோணமலை சல்லி, சாம்பல்தீவு சந்தியில், புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. இந்த இடத்தில் 5 கிலோமீற்றர் சுற்றளவில் எந்தவொரு பௌத்த மத மக்களும் இல்லாத போதும் எதேட்சதிகாரமாக அங்கு நடந்தேறிய பல விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

புத்தர் சிலை வைக்கப்பட்டபோது, நிலாவெளி பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள பொலிஸார் சிலரும், சில முக்கிய பிரமுகர்களும் பங்குபற்றியுள்ளனர்.

குறித்த இடத்தில் சல்லியைச் சேர்ந்த அமரர். முருகேசு நடராசா என்பவரின் ஞாபகார்த்தமாக அவருடைய மனைவி சிவக்கொழுந்து நடராசா அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பயணிகள் இளைப்பாறும் கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையின் போது அங்கு இராணுவமும் கடற்படையினரும் சிறிய முகாம் ஒன்றை அமைத்து கடமையில் ஈடுபட்டு வந்தனர். அச்சந்தர்ப்பத்தில், பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இராணுவ முகாமைச் சுற்றி தகரம் கொண்டு மறைக்கப்பட்டிருந்தனால் அங்கு என்ன நடக்கின்றது என்று எம்மால் அறியமுடியவில்லை.

தற்போது நாட்டில் நிலவிவருகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் காரணமாக, நாட்டில் தேவைக்கு அதிகமாகவுள்ள பாதுகாப்பு அரண்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இந்தச் சாம்பல்தீவு சந்தியில் இருந்த படைமுகாமும் அகற்றப்பட்டு, அங்கிருந்த படையினர் தங்களுடைய உடமைகளையும் எடுத்தச் சென்று விட்டனர்.

அவ்வேளையில் அங்கிருந்த புத்தபகவானின் சிறிய வழிபாட்டுத்தலமும் அதன் அருகில் அரச மரமும் இருந்ததை அவதானித்தோம். ஆயினும், இந்த அரச மரம் சில விசமிகளால் வெட்டப்பட்டுள்ளது. எனவே, இந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதற்காக படைமுகாம்கள் இருந்த எல்லா இடங்களிலும் விகாரைகளை நிறுவி, ஏனைய சமய மக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும்.

நல்லாட்சியை விரும்பாத சில விசமிகளும் இனமுறுகலை ஏற்படுத்த எத்தனிக்கும் சில பௌத்த மதத் துறவிகளின் செயலால் இந்த நிலை எற்பட்டு வருகின்றது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.