மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும்.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மாலை 3 மணிக்குக் கூடும். சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டை வாசிப்பார்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தையும் சேர்த்து, இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசில் இது​வரையிலும் 71 வரவு-செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு, ஜனவரியில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இருப்பதால், சகல தரப்பினரையும் திருப்தி கொள்ளவைக்கும் வகையில், இந்த வரவு-செலவுத்திட்டத்தில் நிவாரண முன்மொழிவுகள் பெரும்பாலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, அரசியல் அவதானிகள், எதிர்வு கூறியுள்ளனர்.