மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.
இதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.
பின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று (13) குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.