மாயாவதியும் – முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?

மோடிக்கு நிகரானவர் யோகி

ஜாதிக்கலவரம் உத்தரப்பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் பரவி விட்டது, செவ்வாய்கிழமை ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் கலவரம் வெடித்ததில் இரண்டு தலித் இளைஞர்கள் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், இணைய தள சேவை, தொலைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டு வந்த தலித் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாளின்போது விழாவைக் கொண்டாடக் கூடாது என்று உயர்ஜாதியினர் மிரட்டி யதும், அதை மாவட்ட நிர்வாகமும் ஏற்று தலித்துகள் அம்பேத்கர் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டததைத்தொடர்ந்து மேற்கு உத்தரப்பிரதேச மாநிலப் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது, இந்த நிலையில் இம்மாதம் அய்ந்தாம் தேதி மகாரானா பிரதாப் சேனா என்ற உயர்ஜாதி அமைப்பைச்சேர்ந்தவர்கள் ரானா பிரதாப் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர். இதனை தட்டிக்கேட்டு மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கச்சென்ற தலித்துகள் கடுமை யாக தாக்கப்பட்டனர். தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன. சகரன்பூர் மாவட்டத்தில் 2 கிராமங்களில் தலித்வீடுகள் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டன.

இது குறித்து திங்களன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதியும் விரைந்து சென்று பார்வையிட்டுள்ளார்.
இவர்கள் சென்ற பிறகு பிரதாப் சேனா அமைப்பினர் மீண்டும் தலித்துகள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வாள் மற்றும் கத்திகளால் தாக்குதல் நடத்தினர். இதிலும் ஒரு தலித் இளைஞர் கொல்லப் பட்டார்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மாநில காவல்துறை ஆணையர், உ.பி. உள்துறை செயலாளர், காவல்துறை ஆணையர் (சட்டம்- ஒழுங்கு) மற்றும் சிறப்பு மாநில தலைமைச் செயலாளர் போன்றோர் அடங்கிய குழு சகரன்பூருக்கு சென்று நிலைமையைச் சமாளிக்க முயன்றது, முடியவில்லை. புதன் கிழமை மீண்டும் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சகரன்பூருக்கு அருகே உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த தலித்துகளை 40 பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
இக்கலவரம் தொடர்பாக உயர்ஜாதியினரை தலித்துகள் தாக்கிவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு சகரன்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாழும் தலித்துகளின் குடியிருப்புகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக மாவட்ட ஆட்சியாளர் என்.பி.சிங் மற்றும் மண்டல காவல்துறை ஆணையர் ஜே.கே.ஷாகி, மாவட்ட இணை ஆணையர் சுபாஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. (இவர்கள் அனைவரும் சமீபத்தில் சாமியாரும் முதல்வருமான ஆதித்தியநாத்தால் ஜாதி ரீதியாக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்).

இந்த நிலையில் முதல்வர் தனது சமூக வளைதளத்தில் இருந்து நேற்று முழுவதும் மக்கள் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டி ருந்தார். (கடந்த மூன்று நாள்களாக மாநிலம் முழுவதும் இணைய தளம், மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). நேற்று முதல் நாள் இரவு மலிகிபூர் என்ற இடத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது, கலவரம் நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்புதான் மாநில உள்துறை செயலாளர் அப்பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்.

மாநில அரசு இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட விபரம் வருமாறு:
கலவரம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட தலித்துகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீம் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இக்கலவரம் தொடர்பான மகாரனா பிரதாப் சேனா அமைப்பினர் மீது இரண்டு முதல் குற்ற அறிக்கைகள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மே 5 ஆம் தேதியன்று ரானாபிரதாப் சேனாவினர் தலித்து களின் வீடுகளுக்கு தீவைத்தனர். மே 9 ஆம் தேதியன்று புகார் அளிக்க வந்த தலித்துகள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தி விரட்டினர். மே 21 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் பீம் ஆர்மியினர் பத்தாயிரம் பேர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மே 23 ஆம் தேதியன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மாயாவதியின் வருகைக்குப் பிறகு மீண்டும் கலவரம் மூண்டது. இதில் தலித் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மே 24 ஆம் தேதியன்று செங்கல் சூளையில் பணிபுரிந்த தலித்துகள் தாக்கப்பட்டனர். இருவர் கொலை செய்யப்பட்டனர். மாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தலித் கொல்லப்பட்டார்.

மாநிலம் முழுவதும் கலவரச் சூழல் நிலவும் போது அலகாபாத், அயோத்தியா போன்ற இடங்களில் ராமாயண கண்காட்சி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உகந்த நல்ல நாள் பார்க்கவும் பண்டி தர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் பூசாரியான முதலமைச்சர்.
மோடிக்கு நிகரானவர் யோகா சாமியார் ஆதித்தியநாத் என்று ஒரு பக்கம் பிரச்சாரம் . உண்மைதான். மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது? ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவரின் ஜோடி என்று கருதப்படும் யோகி ஆதித்தியநாத்தின் ஆட்சியில், உ.பி.யில் தாழ்த்தப்பட்டோர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இதற்குமேலும் மாயாவதிகளும், முலாயம்சிங்குகளும் முரண்டு பிடித்து நிற்பார்களேயானால், மேலும் மோசமான நிலைக்குத் தயாராகித்தான் தீரவேண்டும். கன்சிராம் பாதையை மீண்டும் மாயாவதி தேர்வு செய்யவேண்டும். சர்வஜன் போய் பகுஜன் பாதைக்குத் திரும்பட்டும் செல்வி மாயாவதி!