மாவை கைவிட சுரேஸிடம் சரண் அடைந்தார் ஜங்கரநேசன்!

வடக்கு மாகாணசபையின் இன்றைய குழப்பங்களின் மத்தியில் மீண்டுமொரு முறை தனது அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன். வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் நான்கு அமைச்சர்களையும் தமிழரசுக்கட்சி தன்னுடைய எதேச்சதிகார திமிருடன் தெரிவு செய்திருந்தது. இதனால் கூட்டமைப்பு பெயரளவிலா என அப்போது கேள்வி எழுப்பிய அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆ.எல்.எவ் தனக்கு கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவியையும் தமிழரசுக் கட்சியே எடுத்துக் கொண்டாதாகவும் அதனால் தமது கட்டுப்பாட்டுகளை மீறி தமது கட்சியை சேர்ந்த ஐங்கரநேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்து ஐங்கரநேசனை தமது கட்சியை விட்டு நீக்கியிருந்தது. இந்நிலையில் ஐங்கரநேசன் தமிழரசுக்கட்சியின் செல்லப் பிள்ளையாக மாறியதுடன் மாவை சேனாதிராசாவின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறியுமிருந்தார். தனது முந்தைய தலைவரான சுரேஸ் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அப்போது முன்வைத்து வந்துமிருந்தார்.

குறிப்பாக சுன்னாகம் கழிவு ஓயில் கலந்த குடிநீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய நிறுவனத்திடம் கைநீட்டி பணம் பெற்றவரான மாவை.சேனாதிராசாவை காப்பாற்ற போய் தானும் அந்த சகதிக்குள் அகப்பட்டவராகவே ஜங்கரநேசனின் கதை அமைந்திருந்தது. எனினும் தற்போது சுமந்திரன் அணி முதலமைச்சரினை கவிழ்க்க பகடைக்காயாக ஜங்கரநேசனை பயன்படுத்த முற்பட்ட நிலையில் மாவையும் தன்னை நட்டாற்றினில் கைவிட்டமை தொடர்பில் ஜங்கரநேசன் அதிர்ந்து போயிருந்தார். இந்நிலையினில் தனது ஆசனத்தை தக்க வைக்க மறுபடியும் சுரேஸ்பிரேமச்சந்திரனின் காலடியில் வீழ்வதை தவிர ஜங்கரநேசனிற்கு வேறு வழிகள் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து தனது சகபாடி சிவசக்தி ஆனந்தனை வழிநடத்தி சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசு மற்றும் ஏனைய கட்சிகளது மாகாணசபை உறுப்பினர்களை வளைத்து ஜங்கரநேசனை காப்பாற்றி தமிழரசுக்கட்சியின் சதியினை உடைத்துள்ளார். ஜங்கரநேசனிற்கு எதிராக பிரேரணையினை கொண்டுவந்த இந்திராசா தான் செய்தது தப்பென சொல்லவைப்பது வரை இம்முயற்சி சென்றிருந்தது. இதன் மூலம் மீண்டுமொரு முறை தனது அரசியல் சாணக்கியத்தை சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.